மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

நினைவு வளைவால் என்ன பயன்?: நீதிமன்றம் கேள்வி!

நினைவு வளைவால் என்ன பயன்?: நீதிமன்றம் கேள்வி!

எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்ட தடை விதிக்கக் கோரிய வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, மதுரையில் 2017 ஜூன் மாதம் தொடங்கப்பட்டு, திண்டுக்கல்லில் டிசம்பரில் நிறைவடைந்தது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னையில் அவரது நினைவாக நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கத் திட்டமிட்டு ரூ.2.52 கோடி செலவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன.

இதற்கிடையே எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவைத் திறக்க தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் தினேஷ் குமார் நவம்பர் 17ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி எந்தவித நிகழ்ச்சியும் இல்லாமல் எம்ஜிஆர் பிறந்தநாளான ஜனவரி 17ஆம் தேதி தமிழக அரசு வளைவைத் திறந்தது.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று (பிப்ரவரி 7) நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சியின் சாலைகள் குறித்த அறிக்கையைத் தமிழக அரசு தாக்கல் செய்தது. அதில், எம்ஜிஆர் வளைவு கட்டப்பட்டுள்ள காமராஜர் சாலை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருப்பதாபவும், அங்குக் கட்டுமானங்கள் மேற்கொள்ள அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு, மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு அனுமதியளிக்க மட்டுமே மாநகராட்சிக்கு அதிகாரம் உள்ளதாகவும், இந்த வளைவு பாதசாரிகளுக்கு இடையூறாகக் கட்டப்பட்டிருப்பதாகவும், அரசியல் காரணங்களுக்காகவே இதற்கு அனுமதி அளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர் ஆகியோருக்கு ஏற்கனவே வளைவுகள் கட்டப்பட்டுள்ள நிலையில் எம்.ஜி.ஆருக்கு வளைவு கட்டப்பட்டது எப்படி அரசியலாகும் எனக் கேள்வி எழுப்பினர். இதுபோன்ற நிரந்தர வளைவுகளால் மக்களுக்கு என்ன பயன் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

வியாழன், 7 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon