மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

ஓட்டுநர் தற்கொலை: போலீசார் மீதுதான் தவறு!

ஓட்டுநர் தற்கொலை: போலீசார் மீதுதான் தவறு!

கால் டாக்ஸி ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை விவகாரத்தில் போக்குவரத்து போலீசார் மீதுதான் தவறு என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த ராஜேஷ், சென்னையில் தனியார் நிறுவனமொன்றில் கால் டாக்ஸி ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த 25ஆம் தேதியன்று இவர் தற்கொலை செய்துகொண்டார். தன் சாவுக்கு போலீசார் தான் காரணம் என்று பேசிய வீடியோவை, அவர் தனது செல்போனில் பதிவு செய்திருந்தார். இது சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியானது.

இதையடுத்து, ஓட்டுநர் ராஜேஷ் மரணத்திற்கு நீதி வேண்டி தமிழகம் முழுவதும் பிப்ரவரி 5ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர் டாக்சி ஓட்டுநர்கள்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமாரி தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார் சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன். அண்ணா நகர் மற்றும் திருமங்கலம் போக்குவரத்து காவல் பிரிவில் பணியாற்றுவோர் உள்ளிட்ட 68 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இன்று (பிப்ரவரி 7) இந்த விசாரணையை அறிக்கையாகத் தாக்கல் செய்தார் இணை ஆணையர் விஜயகுமாரி. அதில், ராஜேஷைத் திட்டிய இரண்டு போக்குவரத்து போலீசார் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ராஜேஷ் கூறிய அனைத்தும் உண்மை எனவும், போக்குவரத்து போலீசார் மீதே தவறு எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு போலீசார் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மாநில மனித உரிமை ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்திய தமிழக அமைச்சர் ஜெயக்குமார், ராஜேஷ் உட்பட 3 பேருக்கு நிவாரணத் தொகை வழங்கப்படுமென்று அறிவித்துள்ளார்.

வியாழன், 7 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon