மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 2 ஜூலை 2020

ஸ்டெர்லைட் வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு!

ஸ்டெர்லைட் வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு!

வேதாந்தா நிறுவனம் சார்பில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது குறித்து, கடந்த ஆண்டு மே மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனை ரத்து செய்யுமாறு, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அந்நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியது பசுமைத் தீர்ப்பாயம். இதன் பின்னர் இரண்டு முறை ஆலையைத் திறக்க அனுமதி வழங்குமாறு தமிழக அரசிடம் மனுக்கள் அளித்தும் அவை நிராகரிக்கப்பட்டதாகப் புகார் தெரிவித்தது வேதாந்தா நிறுவனம். தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டும் ஆலையைத் திறக்கத் தமிழக அரசு மறுப்பு தெரிவிக்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

கடந்த 5ஆம் தேதியன்று நடந்த வழக்கு விசாரணையின்போது, “ஸ்டெர்லைட் ஆலை விதிகளை மீறியதாகத் தமிழக அரசு குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு ஸ்டெர்லைட் வழக்கை விசாரணை செய்யும் அதிகாரமுள்ளது” என்று வேதாந்தா நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது.

இன்று (பிப்ரவரி 7) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாதாடினார். ஸ்டெர்லைட் ஆலைப் புகையினால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக, அவர் தன் வாதத்தில் குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர் நீதிபதிகள். இந்த வழக்கில் வரும் 11ஆம் தேதிக்குள் அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டனர்.

வியாழன், 7 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon