மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

தமிழகம்: எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பட்ஜெட்!

தமிழகம்: எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பட்ஜெட்!

2019-20ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நாளை சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் ஜனவரி 2ஆம் தேதி தொடங்கியது. மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து ஜனவரி 3ஆம் தேதி அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு 8ஆம் தேதி வரை தொடர்ந்த சட்ட மன்றக் கூட்டம், அன்றைய தினம் முதல்வர் உரையுடன் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் 2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான கூட்டம் நாளை (பிப்ரவரி 8) நடைபெறுகிறது.

இதற்கான அறிவிப்பை சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஜனவரி 31ஆம் தேதியே வெளியிட்டார். இதன்படி தமிழக நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நாளை காலை 10 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகிறார். பட்ஜெட் உரையை தாக்கல் செய்து பேசி முடிக்க சுமார் 2 மணி நேரம் ஆகும் என்பதால் சட்ட சபையில் அவருக்காக தனி மேடை அமைக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளதால் மத்திய பட்ஜெட்டைப் போலவே தமிழக பட்ஜெட்டும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

8ஆவது முறையாக ஓ.பன்னீர்செல்வம் நாளை பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இதனையடுத்து பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது தொடர்பான அலுவல் ஆய்வுக் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெறுகிறது. அதிகபட்சமாக 5 நாட்கள் பட்ஜெட் விவாதக் கூட்டம் நடத்த வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. கொடநாடு கொலை விவகாரம், ஜாக்டோ-ஜியோ போராட்டம், ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை, கஜா புயல் நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

வியாழன், 7 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon