மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 8 ஜூலை 2020

தவறான பரப்புரை செய்யாதீர்: திருபுவனம் கொலை குறித்து காதர் மொய்தீன்

தவறான  பரப்புரை  செய்யாதீர்: திருபுவனம் கொலை குறித்து காதர் மொய்தீன்

திருபுவனம் ராமலிங்கம் கொலை குறித்து காவல் துறை உடனடியாக அறிக்கை வெளியிடவேண்டும் என்றும், தவறான பரப்புரையை யாரும் வெளியிடவேண்டாம் எனவும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் வலியுறுத்தியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருபுவனத்தில் மேலத்தூண்டி விநாயகம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் நகரச் செயலாளரான இவர், திருபுவனம் பகுதியில் நிகழ்த்தப்பட்டு வந்த மதமாற்றத்தை எதிர்த்து வந்தார். நேற்று முன் தினம் இரவு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் அவரை வழிமறித்த சிலர், ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த ராமலிங்கம் தஞ்சை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக தமிழக தலைவர் தமிழிசை, ஹெச்.ராஜா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராமலிங்கம் கொலைக்கு காரணம் மதமாற்றத்தை அவர் எதிர்த்ததுதான் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் இன்று (பிப்ரவரி 7) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று (07-02-2019) ஆங்கில மற்றும் தமிழ் நாளிதழ்களில் வெளிவந்துள்ள செய்தி மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது. திருபுவனத்தில் ராமலிங்கம் என்பவர் சில சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் மரணமுற்றார் என்றும் மதமாற்றம் செய்வதை எதிர்த்த காரணத்தினால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் தலைப்பிட்டு செய்தி பிரசுரமாகி இருக்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் மதமாற்றத்தை தடுத்த ஒருவர் கொல்லப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இதனால் சமூக நல்லிணக்கம் பாதிக்கும் என்றும் ஒரு சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து இந்த கொலையை புலனாய்வு செய்யவேண்டும் என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கொலை பற்றிய எந்த ஒரு விவரத்தையும் இந்த நேரம் வரை காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள காதர் மொய்தீன், “கொலை செய்யப்பட்டவர் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர், என்ன தொழில் செய்தவர், திருபுவனம் முஸ்லிம் தெருவுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு எதனால் வந்தது? எப்படி வந்தது? முஸ்லிம் தெருவுக்கும் மதமாற்றத்துக்கும் என்ன சம்பந்தம்” என்று பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மேலும், “ நாட்டில் தொடர்ந்து நடைபெற்றுவரும் கொலைகளுக்கான காரணங்களை பத்திரிகை வாயிலாக அறியும்போது மிகுந்த ஆச்சர்யமும், பேரதிர்ச்சியும், பெரும் அச்சமும் மக்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிற இவ்வேளையில் திருபுவனம் கொலை செய்தியால் தமிழக மக்கள் மத்தியில் மேலும் குழப்பமோ, கொந்தளிப்போ ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் அரசியல் தலைவர் களும், பத்திரிகை துறை யினரும், ஊடகத்தாரும் கவனமாக இருக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தங்கள் கட்சியின் குழுவினர் திருபுவனம் சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்டு தலைமை நிலையத்துக்கு உடனடியாக அறிக்கை அளிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறியுள்ள காதர் மொய்தீன், காவல்துறை அதிகாரி களிடமிருந்து சரியான தகவல்கள் வெளிவரும் வரை திருபுவனம் சம்பவம் பற்றிய அறிவிப்புகளோ, அறிக்கைகளோ வருவதும் பரப்புவதும் நியாயமானதாக இருக்காது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

வியாழன், 7 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon