மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 3 ஜூலை 2020

கூட்டணிக்கு பாமகவை வரவேற்கிறோம்: ஜெயக்குமார்

கூட்டணிக்கு பாமகவை வரவேற்கிறோம்: ஜெயக்குமார்

பாமகவுடனான கூட்டணி குறித்து கேள்விக்கு, “திமுக, அமமுகவை தவிர யாரை வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரவேற்கிறோம்” என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் பாமக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாமக, அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது. அதன்பிறகு 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட்டு, தர்மபுரி தொகுதியில் மட்டும் வெற்றிபெற்றது. திராவிடக் கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று கூறிவந்த பாமக, தற்போது அதிமுக கூட்டணியில் இணையவுள்ளதாக கூறப்படுவதை இணையத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் (பிப்ரவரி 7) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம், அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளுடனும் பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படுகிறதே என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “இது தேர்தல் காலம். திமுகவுக்கும் எங்களுக்கும்தான் போட்டியே. அமமுகவை ஒரு லெட்டர் பேட் கட்சியாகவே கருதுகிறோம். இந்த இரண்டு கட்சிகளைத் தவிர யாரும் எங்களுக்கு எதிரி கிடையாது. மற்ற அனைவரும் எங்களுக்கு நண்பர்கள்தான். எங்களுடைய தலைமையை ஏற்கும் யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம். அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். அதிமுகவின் அதிகாரப்பூர்வமான கருத்துக்களை பேட்டி மூலமாக ஊடகத்தில் தொடர்ந்து பேசிவரும் அமைச்சர் ஜெயக்குமார், பாமகவுக்கு அழைப்பு விடுத்துள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

வியாழன், 7 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon