மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 8 ஜூலை 2020

இங்குதான் மதுவுக்கு அடிமையானவர்கள் அதிகம்!

இங்குதான் மதுவுக்கு அடிமையானவர்கள் அதிகம்!

2016ஆம் ஆண்டுக்குப் பிறகு எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன என்றும், தற்போது எத்தனை டாஸ்மாக் கடைகள் உள்ளன என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நீதிமன்றம் முன்பாக உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி மணப்பாறை வழக்கறிஞர் சங்கச் செயலர் செல்வராஜ் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். “இந்த டாஸ்மாக் கடை தேசிய நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ளது. இதனால், நீதிமன்றத்திற்கு வருபவர்கள் சிரமம் அடைகின்றனர். இந்த கடையை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று (பிப்ரவரி 7) விசாரித்தது நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு. டாஸ்மாக் கடைகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது தற்காலிகமாக டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளதாகவும், விரைவில் வேறு இடத்துக்கு மாற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் மதுவுக்கு அடிமையானவர்கள் அதிகமுள்ளனர் என்று தெரிவித்த நீதிபதிகள், டாஸ்மாக்கின் நிர்வாக இயக்குநரை இந்த வழக்கில் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கில் எதிர்மனுதாரராகச் சேர்ப்பதாக உத்தரவிட்டனர்.

“தமிழகத்தில் மொத்தம் எத்தனை டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் உள்ளன? போதிய உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய டாஸ்மாக் கடை மற்றும் பார்கள் எத்தனை? டாஸ்மாக் கடை மற்றும் பார்களுக்கு திட்ட வரைபட அனுமதி பெறப்பட்டுள்ளதா? எத்தனை டாஸ்மாக் கடை மற்றும் பார்களில் தீயணைப்பு உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன? டாஸ்மாக் மற்றும் பார்களுக்கு உரிமம் கோரி எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர்? உரிமம் வழங்குவதை முறைப்படுத்துவதற்கான விதிகள் என்னென்ன? பார்களில் வழங்கப்படும் உணவுப்பொருட்கள் உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பரிசோதிக்கப்படுகிறதா? அதிகாரிகள் பார்களில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனரா? படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படுமென அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் எத்தனை? அடுத்தகட்டமாக எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்படும்? அவை எப்போது மூடப்படவுள்ளன?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இது குறித்துத் தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.

வியாழன், 7 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon