மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 8 ஜூலை 2020

ஹாரர் கொலை: பாலகிருஷ்ணனுக்கு நீதிமன்ற காவல்!

ஹாரர் கொலை: பாலகிருஷ்ணனுக்கு நீதிமன்ற காவல்!

மனைவி சந்தியாவை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிக் குப்பையில் வீசிய வழக்கில், பாலகிருஷ்ணனை பிப்ரவரி 19ஆம் தேதி வரை காவலில் வைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 21 ஆம் தேதி பள்ளிக்கரணை குப்பை கிடங்கில் இயந்திரத்தால் அறுக்கப்பட்ட பெண்ணின் கை கால்கள் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆய்வாளர் ஆல்பின்ராஜ் தலைமையில் அதிகாரிகள் கடந்த 16 நாட்களாகத் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று அந்த உடல் பாகங்கள் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியாவுடையது என்பதும், அவரது கணவரும் இயக்குநருமான பாலகிருஷ்ணன் கொலை செய்ததும் தெரியவந்தது.

பாலகிருஷ்ணனை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர்.

பேப்பர் கட்டிங் இயந்திரத்தை வைத்து சந்தியா உடலை 7 பாகங்களாக வெட்டி, அதனை 4 கவர்களில் கொண்டு சென்று குப்பைத்தொட்டியில் போட்டதாகவும், தாம் மட்டுமே உடல் பாகங்களை வெட்டியதாகவும் பாலகிருஷ்ணன் வாக்குமூலம் கொடுத்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே சந்தியாவை மிகவும் கொடுமைப் படுத்தியதாகவும், சந்தேகப்பட்டு சித்ரவதை செய்ததாகவும் அவரது உறவினர்கள் பாலகிருஷ்ணன் மீது குற்றம்சாட்டினர். அவருக்குக் கடுமையான தண்டனை வாங்கித் தர வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

சந்தியாவின் கை, கால்கள், இடுப்பு பகுதிகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது தலை உட்பட மற்ற பாகங்கள் தேடப்பட்டு வருகிறது. பள்ளிக்கரணை காவல்துறையினரும் சென்னை மாநகராட்சி ஊழியர்களும் பெருங்குடி குப்பை கிடங்கில் இன்று (பிப்ரவரி 6) காலை முதல் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், பாலகிருஷ்ணன் மீது கொலை வழக்கு மற்றும் தடயங்களை மறைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பிப்ரவரி 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்போது அவர், “தான் சந்தியாவை கொல்லவில்லை” என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தியாவின் தந்தை ராமச்சந்திரன், “தனி ஒருவரால் மட்டும் இப்படி கொலை செய்திருக்க முடியாது. இதில் பாலகிருஷ்ணனுக்கு உதவியாக அவரது குடும்பத்தினரும் உடனிருந்திருப்பர்” என்று புகார் தெரிவித்துள்ளார்.

வியாழன், 7 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon