மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 8 ஜூலை 2020

பாலாவின் ‘வர்மா’ கைவிடப்பட்டது!

பாலாவின்  ‘வர்மா’ கைவிடப்பட்டது!

பாலா இயக்கத்தில் உருவான ‘வர்மா’ படத்தைக் கைவிடுவதாக E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கை பாலா ‘வர்மா’ என்ற பெயரில் இயக்கியுள்ளார். விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மேகா நடித்துள்ளார். படத்தின் பணிகள் நிறைவடைந்து காதலர் தினத்துக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால் விலங்குகள் நல வாரியத்தில் தடையில்லா சான்றிதழ் பெறுவதில் தாமதமானதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

தற்போது தயாரிப்பு நிறுவனம் படத்தை கைவிடுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கை ‘ஃபர்ஸ்ட் காப்பி’ அடிப்படையில் தயாரித்து கொடுப்பதாகப் பாலாவின் பி ஸ்டூடியோஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.

படம் தயாரிப்பாளர் தரப்புக்கு திரையிட்டுக் காட்டப்பட்டபோது அர்ஜுன் ரெட்டி படத்திற்கும் வர்மா படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாகக் கூறி படத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளனர். இதனால் பெரிய நஷ்டம் ஏற்பட்டாலும் சிறந்த படத்தின் ரீமேக்கை தமிழில் தரமாக உருவாக்கி வெளியிட விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே கதையில் துருவ் கதாநாயகனாக நடிக்க புதிய இயக்குநர், தொழில்நுட்ப கலைஞர்கள் உடன் மீண்டும் தயாரிக்கப்பட்டு திரையிடப்படும் என்றும் பட நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழ்த் திரையுலகத்தில் ஒரு படம் முழுமையாக எடுத்து முடிக்கப்பட்டு, கருத்து வேறுபாட்டால் அல்லது எதிர்பார்த்தபடி படம் இல்லை என்பதால் வெளியிடுவதில்லை என்ற முடிவை தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது இதுவரை நடைபெற்றது இல்லை.

முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாலா இயக்கி முடித்துள்ள வர்மா படம் சம்பந்தமாக இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகி இருப்பது தமிழ்த் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வியாழன், 7 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon