மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 8 பிப் 2019

கல்வியே அஸ்திவாரம், திறமையே கட்டடம்! - காம்கேர் கே.புவனேஸ்வரி

கல்வியே அஸ்திவாரம், திறமையே கட்டடம்! - காம்கேர் கே.புவனேஸ்வரி

எந்தப் பாதையில் உங்கள் பயணம்? - 18

ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் ஆசிரியர், வருங்காலத்தில் நீங்கள் என்னவாக வர ஆசைப்படுகிறீர்கள் என்ற கேள்வியை கேட்க, மாணவர்கள் ஒவ்வொருவரும் மருத்துவர், ஓவியர், பாடகர் என்ற பதில்களைச் சொல்ல ஒரு மாணவன் மட்டும் ‘நான் குதிரை வண்டி ஓட்டப் போகிறேன்’ என்றான். அனைவரும் சிரித்தனர்.

வீட்டுக்குச் சோர்ந்த முகத்துடன் வந்த அந்தச் சிறுவனின் அம்மா காரணம் கேட்கிறார். சிறுவன் வகுப்பில் நடந்ததைச் சொல்கிறான். உடனே அந்தத் தாய் சுவரில் மாட்டியிருந்த கிருஷ்ணர் அர்ஜுனனுக்குத் தேர் ஓட்டும் ஓவியத்தைக் காண்பித்து, ‘சரி உன் இஷ்டப்படி குதிரை வண்டி ஓட்டியாக ஆசைப்பட்டால் கிருஷ்ணரைப் போல ஆக வேண்டும்’ என வாழ்த்தினார்.

அந்தச் சிறுவன் வேறு யாருமில்லை. நரேந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட சுவாமி விவேகானந்தர்.

தொழில் எதுவானால் என்ன அதில் உள்ள மேன்மையை மட்டும் யோசிக்க வேண்டும். எந்தத் தொழிலானாலும் அதன் உச்சத்தைத் தொட்டுவிட கனவுகண்டு உழைத்துவிட்டால் எந்தத் தொழிலும் உத்தமமே.

ஒருமுறை உயர்நிலைப் பள்ளியில் ஒரு நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். அவர்களுடன் உரையாடியபோது, 10ஆம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன் தான் ஒரு நடிகனாக வேண்டும் என்பதே தன் கனவு என்றும், அண்மையில் வெளியான ஒரு சினிமாவில் ஹீரோவுடன் சுற்றும் நண்பர்கள் கூட்டத்தில் ஒருவனாக நடித்திருப்பதாகவும், அந்த சினிமாவில் டைட்டில் கார்டில் ‘சுரேந்தர்’ என்று தன் பெயரும் வந்தது என்றும் உற்சாகமாகச் சொன்னான்.

உடனே வகுப்பு ஆசிரியர் ‘இதனாலேயே இவன் படிப்பில் கவனம் செலுத்த மாட்டேன் என்கிறான்… எல்லா சப்ஜெக்ட்டிலும் ஜஸ்ட் பாஸ்தான்… கொஞ்சம் கவனம் சிதறினால் ஃபெயில் மார்க்தான் எடுக்கிறான்… என்ன செய்வதென்றே தெரியலை…’ என்று சொன்னார்.

மாணவர்களிடம், ‘இன்றைய காலகட்டத்தில் எந்த நடிகராவது ஒரு டிகிரிகூட படிக்காமல், கல்லூரி செல்லாமல், ஆங்கிலம் பேசத் தெரியாமல் நடிப்பு தவிர கூடவே வேறு ஒரு பிசினஸையும் வைத்துக்கொள்ளாமல் நடிக்க வருகிறார்களா?’ என்று கேட்டேன்.

‘நோ மேம்…’ என்று ஒத்த குரலில் சொன்ன மாணவர்களிடம், ‘கார்த்தி அமெரிக்கா போய் படிச்சுட்டு வந்திருக்கிறார்…’ என்று நான் ஆரம்பித்து வைக்க, மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த நடிகர் நடிகைகளின் படிப்பை அவரவர்களுக்குத் தெரிந்தவரை பட்டியலிட்டார்கள்.

‘சூர்யா லயோலா கல்லூரியில் பி.காம் படிச்சிருக்கார்…’

‘நயன்தாரா ஆங்கில இலக்கியம்…’

‘கீர்த்தி சுரேஷ் ஃபேஷன் டிசைனிங்…

‘விக்ரம் லயோலாவில் ஆங்கில இலக்கியம்…’

‘சிவகார்த்திகேயன் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங்…’

என்று அடுக்கிக்கொண்டே செல்ல நடிகனாக விரும்பிய சுரேந்தரை நான் ஸ்டேஜுக்கு அழைத்தேன்.

‘நடிகனாவது உன் கனவு. கனவு நனவாகத் திறமை மட்டும் போதாது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அவசியம் தேவை. கல்லூரியில் நடிப்பு மற்றும் அது சார்ந்த துறையை தேர்ந்தெடுத்துப் படிக்க வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. ஆனால் அதற்கு நீ +2 தேர்வாகி இருக்க வேண்டுமே. அதற்காகவாவது பாஸ் செய்யும் அளவுக்குப் படிக்க வேண்டும்’ என்றபோது...

‘மேம்… படிக்காமல் என் நடிப்புத் திறமையை வைத்தே சினிமாவில் ஜெயிக்க முடியாதா?’ என்ற கேள்வி ஒன்றை வைத்தான்.

‘திரைப்படத் துறையில் எல்லோருக்கும் நேரமும் காலமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. உழைப்பையும், திறமையையும் மீறி அதிர்ஷ்டம் என்ற ஒன்றையும் நம்பித்தான் இந்தத் துறை இயங்குகிறது. மேலும் உன் ஒருவனின் திறமையை மட்டும் வைத்து வெற்றி தோல்வியை இந்தத் துறையில் நிர்ணயிக்க முடியாது. பலரது உழைப்பில்தான் ஒரு சினிமாவின் வெற்றி தோல்வி இருக்கிறது.

எனவே, சினிமா துறையில் நுழைவதானால் கையில் நல்ல படிப்பையும், கூடவே மற்றொரு தொழிலையும் ‘பேக் அப்’ ஆக வைத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை அந்தத் துறையில் தொய்வு ஏற்படுமேயானால் கீழே விழுந்துவிடாமல் இருக்க உதவும்’ என நிதர்சனத்தை நிதானமாகச் சொன்னேன்.

‘கான்சன்டிரேட் செய்து படிக்க முயற்சி செய்கிறேன் மேம்…’ என்று சொல்லிவிட்டுச் சென்றான் சுரேந்தர்.

+2 முடித்த பிறகான 17 வயது காலகட்டத்திலும், கல்லூரி முடித்த 21 வயது காலகட்டத்திலும்கூட ‘நம் வாழ்க்கையில் நாம் என்னவாகப் போகிறோம்’ என்ற குறிக்கோளில் மாற்றம் ஏற்படலாம். விரும்பினால் நாமாகவும் மாற்றம் செய்துகொள்ளவும் முடியும்.

எப்படி?

கற்போம்… கற்பிப்போம்!

(கட்டுரையாளர் : காம்கேர் கே.புவனேஸ்வரி - காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் என்னும் ஐடி நிறுவனத்தின் CEO. நிர்வாகி, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர். M.Sc., Computer Science, M.B.A பட்டங்கள் பெற்றவர். தொழில்நுட்பம், வாழ்வியல் குறித்த 100க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். இவரது சாஃப்ட்வேர், அனிமேஷன் தயாரிப்புகளும் தொழில்நுட்பப் புத்தகங்களும் பல கல்லூரிகளில் பாடத் திட்டமாக உள்ளன. இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

நீ என்னவாகப் போகிறாய்?

வெள்ளி, 8 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon