மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

பைனான்சியர்கள் சங்கம் தமிழ் சினிமாவுக்கு வரமா சாபமா?

பைனான்சியர்கள் சங்கம் தமிழ் சினிமாவுக்கு வரமா சாபமா?

தமிழ் சினிமா 365: பகுதி - 35

இராமானுஜம்

'தென்னிந்திய சினிமா பைனான்சியர்கள் சங்கம் வரமா -சாபமா?'என்றால் அதனை இப்போதைக்கு கணிக்க முடியாது என்கின்றனர் சிலர்.

இந்த அமைப்பே தவறானது எனக் கூறுபவர்கள் திரைப்படங்களுக்கு காலங்காலமாக பைனான்ஸ் செய்து வந்த பைனான்சியர்களை இங்கு தொடர்ந்து தொழில் செய்ய விடாமல் அவர்களாக தொழிலை விட்டு ஒதுங்கும் சூழ்நிலையை உருவாக்கியவர்கள் தான் இந்த அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள் என்கிறார்கள்.

திரைத்துறையில் திரையரங்கு உரிமையாளர்களாக, விநியோகஸ்தர்களாக நீண்ட காலமாக இருப்பவர்களும், இன்றைக்கும் அதனைத் தொடர்ந்து செய்து வருபவர்களும் புது அவதாரம் எடுத்திருக்கிறார்கள். சட்டையை மாற்றி போட்டு வந்தால் எல்லாம் மறைந்து போகும் என்று அவர்கள் நினைப்பதாகவே இந்த முயற்சி’ எனக் கூறும் தயாரிப்பாளர்கள் சினிமா வளர்ச்சிக்கு இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதைக் கூற முடியுமா? இவர்களால் தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு தான் ஏற்பட்டிருக்கிறது. ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனுசனை கடிக்கும் கதையாகத்தான் தமிழ் சினிமாவை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிற முயற்சியின் தொடக்கப் புள்ளி இது என்கிறது திரையுல வட்டாரம்.

இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி தொழில் செய்யப் போகிறோம் என்று இந்தியாவுக்குள் நுழைந்தார்கள். பின் படிப்படியாக இந்தியாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். அதிகாரத்தைபங்கிடுவதில் பிரச்சினை வந்தபோது சென்னையும் - புதுச்சேரியும் எப்படி பிரிக்கப்பட்டதோ அதுபோன்று தமிழ் சினிமாவை இந்த சங்கத்தில் இருப்பவர்கள் பங்கிட்டு ஆதிக்கம் செலுத்தும் முயற்சியின் தொடக்கம் தான் இந்த சங்கம் என்கிறார் தயாரிப்பு தொழிலை விட்டு ஒதுங்கியிருக்கும் மூத்த தயாரிப்பாளர் ஒருவர்.

தொழில் ரீதியாக பைனான்ஸ் செய்து வந்த பங்கஜ் மேத்தா, ஜஸ்வந்த் பண்டாரி ஆகியோரை தவிர்த்து பெரும்பான்மையான உறுப்பினர்கள் திரையரங்கு உரிமையாளர்களாக, விநியோகஸ்தர்களாக இப்போதும் இருப்பவர்கள்.

இச்சங்கத்தின் நோக்கங்களாக அறிவிக்கப்பட்டவற்றை கவனத்துடன் பார்க்கவேண்டியதிருக்கிறது. ‘பைனான்ஸ் செய்து படப்பிடிப்பு முடங்கிக்கிடக்கும் திரைப்படங்கள் மற்றும் எல்லா வேலைகளும் முடிந்து வெளிவராத திரைப்படங்கள் ஆகியவற்றை வெளியே கொண்டுவர சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களை அழைத்து இந்த சங்கம் மூலம் தீர்வு காணப்படும்’ எனக் கூறுபவர்கள் இதனை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அல்லவா பேசித் தீர்வு கண்டிருக்க வேண்டும். அதை விடுத்து "எங்கள் சங்கம் மூலம் தீர்வு காணப்படும் " என்றால் தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற அமைப்பை பலவீனப்படுத்தும் செயல் தானே என்கின்றனர்.

‘திரைப்பட நடிகர்கள் இயக்குநர்கள் மற்றும் நடிகைகள் சம்மதித்து அட்வான்ஸ் பெற்றுக் கொண்ட படங்களை முடிக்காமல் வேறு திரைப்படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து விடுகின்றனர். அதனால் அந்த சம்பந்தப்பட்ட திரைப்படம் முடங்கும் நிலையும், அதிக தாமதமும் ஏற்படுகிறது. தயாரிப்பாளர்களுக்கு அதிக வட்டி நஷ்டம் ஏற்படுகின்றது. இனிமேல் முதலில் சம்மதித்து ஆரம்பிக்கப்பட்ட படங்களையே முதலில் முடிக்கவேண்டும். அதையும் மீறி அடுத்த படங்களுக்கு தேதியை கொடுக்கும் நடிகர், நடிகைகள் நடிக்கும் படங்களுக்கு பைனான்ஸ் கொடுப்பது சம்பந்தமாகவும் அந்த நடிகர், நடிகைகள் நடிக்கும் மற்ற திரைப்படங்கள் வெளியீடு குறித்தும் எந்தவித ஒத்துழைப்பையும் கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்யப்படும்’ எனக் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி முடிவு செய்ய வேண்டியது தயாரிப்பாளர்களும் , நடிகர் சங்கமும் தான். கடன் கொடுப்பவர் தனது அசலையும், வட்டியையும் கேட்கலாம். அதை விடுத்து தயாரிப்பாளர்களின் தனிமனித தொழில் சுதந்திரத்தையும், சுயமரியாதையையும் சீண்டுகிற செயலாகவே இதனைப் பார்க்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

இன்றைக்கு பைனான்சியர்களாக மாறியிருக்கும் இவர்கள், ‘அசலும், வட்டியும் கொடுக்க முடியாதவர்கள் எங்கள் மீது அபாண்டமாக குற்றச்சாட்டை வாசிக்கிறார்கள்’ என்று ஆதங்கப்படும் திருப்பூர் சுப்பிரமணி தொடங்கி விநியோகஸ்தர்களாக, திரையரங்கு உரிமையாளர்களாக தயாரிப்பாளர்களின் படங்களை திரையிட்ட வகையில் நேர்மையாளர்களாக, நாணயம் மிக்கவர்களாக நடந்து கொண்டார்களா என்பதையும், கோவை ஏரியாவில் தன் படத்தை திரையிட்ட வகையில் ஏற்பட்ட அனுபவத்தையும், வசூலான தொகையை வாங்குவதற்கு பட்ட பாட்டையும் விவரிக்கும் தயாரிப்பாளரின் அனுபவம் நாளை.

முந்தைய கட்டுரை - உதயமானது திரைப்பட பைனான்சியர்கள் சங்கம்! ?

குறிப்பு : இத் தொடர் சம்பந்தமாக தங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்

ஆசிரியர் குறிப்பு

இராமானுஜம் : கடந்த இருபது ஆண்டுகளாக தமிழ் சினிமா தயாரிப்பு, வியாபாரம், வசூல் விபரங்களை வெளியிட்டு வந்த வணிகப் பத்திரிகையான " தமிழ்நாடு எண்டர்டெயின்மென்ட்" மாத இதழின் பொறுப்பாசிரியராக பணியாற்றியவர்,

வெள்ளி, 8 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon