மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

பெண் இயக்குநர்களுக்கு ரூ.3 கோடி!

பெண் இயக்குநர்களுக்கு ரூ.3 கோடி!

கேரள மாநில பட்ஜெட்டில், மலையாள சினிமாத்துறையில் பணிபுரியும் பெண் இயக்குநர்களுக்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மலையாள சினிமா துறையில் ‘வுமன் இன் சினிமா கலெக்டிவ்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் வாயிலாக, பணியின்போது பெண்கள் சந்திக்கும் ஆணாதிக்கம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து குரல் எழுப்பி வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. நடிகர் திலீப் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டபோது சில பெண் கலைஞர்கள் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கினர். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வந்தனர். இந்த அமைப்பு ஏற்படுத்தியுள்ள மாற்றங்களை ஒப்புக்கொள்ளும் பொருட்டு கேரள அரசின் மாநில பட்ஜெட்டில் பெண் இயக்குநர்களுக்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள நிதியமைச்சரான தாமஸ் ஐசக் பேசுகையில், “மலையாள சினிமா துறையில் பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளது. இவர்கள் துறைசார்ந்த ஆணாதிக்கத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. பெண் கலைஞர்களை நாங்கள் ஆதரிக்க விரும்புகிறோம். மூன்று கோடி ரூபாய் என்பது மிகப்பெரிய தொகையல்ல. வரும் ஆண்டுகளில் இத்தொகை அதிகரிக்கப்படலாம்” என்று தெரிவித்துள்ளார். சில முக்கிய பிரச்சினைகள் பற்றி கருத்து தெரிவித்த பின்னர் தங்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவதில்லை என்று கடந்த ஆண்டு கேரளாவில் சில பெண் கலைஞர்கள் குரலெழுப்பினர் என்பது நினைவுகூரத்தக்கது. பட்ஜெட்டில் பெண் இயக்குநர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு வுமன் இன் சினிமா கலெக்டிவ் அமைப்பும் வரவேற்பளித்துள்ளது.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon