மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

PUBG: முட்டாள் வீரர்களின் கூடாரமா?

PUBG: முட்டாள் வீரர்களின் கூடாரமா?

சிவா

விளையாட்டுத் தொடர்

வீடியோ கேம் துறையில் சம்பாதிப்பது குறித்து எழுதுவது அனைத்தும் ஏதோ மாயாஜால உலகத்துக்குள் இட்டுச் செல்வது போலத் தோன்றலாம். முந்தய பாகங்களில் எழுதியவை சாத்தியமா என்ற சந்தேகமும் எழலாம். நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன்பு இந்த சந்தேகங்கள் எழுந்திருந்தால் யாராலும் அவற்றுக்கு பதில் சொல்லியிருக்க முடியாது. காரணம், அப்போது டிட்ஸ்கார்ட் (Discord) மற்றும் ட்விட்ச் (Twitch) போன்ற சமூக வலைதளங்கள் இல்லை. ஆனால், இப்போது கேம் விளையாடுபவர்களுக்கு ஒரு தளத்தை உருவாக்கித் தருவதற்காகவே மேற்குறிப்பிட்டவை போன்ற பல சமூக வலைதளங்கள் உருவாகியிருக்கின்றன. இவற்றின் அடிப்படை நோக்கமே, பணம் இல்லாத கேமர்களையும், தங்களது கேம்களைச் சந்தைப்படுத்த முயற்சிக்கும் ஸ்டார்ட்-அப் கேம் நிறுவனங்களையும் நுகர்வோரையும் ஒன்றிணைப்பது தான்.

PUBG விளையாட்டைப் பொறுத்தவரையில், அதை விளையாடுபவர்கள் மட்டும்தான் சம்பாதிக்க முடியும் என்றில்லை. டிஸ்கார்ட், ட்விட்ச் போன்றவற்றில் மற்ற வீரர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்ப்பவர்களாலும் சம்பாதிக்க முடியும். அது எப்படி என்று பார்ப்பதற்கு முன்னால், அந்த சம்பாத்தியத்தை உருவாக்கும் சிலரைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

ஒவ்வொரு விளையாட்டுத் துறையிலும் கைதேர்ந்த ஆட்டக்காரர்கள் எப்போதும் உருவாகிறார்கள். அவர்களை மாஸ்டர்கள் என்றும், ஒரு படி மேலே சென்று கடவுள்கள் என்றும் போற்றிக்கொண்டாடுகிறார்கள். அப்படி, PUBG உலகின் மாஸ்டர்களாக வலம்வருபவர்கள் ஷ்ரௌடு (Shroud), சாக்கோ டாகோ (Choco Taco), டாக்டர் டிஸ்ரெஸ்பெக்ட் (Dr DisRespect) ஆகியோர் தான். PUBG போன்ற கேம்களின் அடிப்படை உருவாக்கத்தையும், அவற்றின் அதிகபட்ச பயன்பாட்டிலும் கைதேர்ந்த இவர்களது விளையாட்டுகளை வேடிக்கை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். உதாரணமாக, பிப்ரவரி 8ஆம் தேதி இரவு சாக்கோ டாகோ விளையாடிய PUBG கேமின் 2 மணி நேர நேரலை ஒளிபரப்பை சராசரியாக இருபதாயிரம் பேர் பார்த்துக்கொண்டிருந்தனர். இந்த இருபதாயிரம் பேர் பார்த்துக்கொண்டிருக்கும்போது, அவர்களை எப்படி பொழுதுபோக்குகிறார் சாக்கோ டாகோ என்பதே மிக முக்கியம்.

சாக்கோ டாகோ விளையாடுவதை வேடிக்கை பார்த்துவிட்டு கிளம்பிப்போய்விடும் வழிப்போக்கர்கள் அல்ல, இவர்கள். சாக்கோ டாகோ எப்படி விளையாடுகிறார் என்பதைப் பற்றி, அந்த வீடியோ ஸ்ட்ரீமிங்கின் கமெண்ட்களில் விவாதிப்பது இவர்களது முக்கிய நோக்கம். அப்படி விவாதிக்கும்போது, இவர்கள் சொல்வதைக் கேட்டு சாக்கோ டாகோ விளையாடினாலும், அவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு விளக்கம் கூறினாலும் உடனே சாக்கோடாகோவிற்கு அன்பளிப்பாக ஒரு பணத்தைக் கொடுப்பது, அவருக்கு ஒரு ஊக்கமாக அமையும். அப்படி கிட்டத்தட்ட ஒரு லைவ் ஸ்ட்ரீமிங்கின் போது 5000 அமெரிக்க டாலர்கள் வரை (இந்திய மதிப்பில் மூன்றரை லட்சம் ரூபாய்) அன்பளிப்பாக பெறப்பட்ட வரலாறு மேற்கண்ட மூவருக்கும் இருக்கிறது. இவர்கள் எப்போதும் யாராவது அன்பளிப்பாகக் கொடுப்பார்கள் எனக் காத்திருக்க வேண்டியதில்லை.

இவர்களது லைவ் ஸ்ட்ரீமிங்கை வேடிக்கை பார்ப்பது மட்டுமின்றி, அதில் கமெண்ட் செய்யும்போது பயன்படுத்தக்கூடிய ஸ்டிக்கர் மட்டும் எமோஜிக்கள் அனைத்தும் லாக் செய்யப்பட்டிருக்கும். அவற்றில் தங்களுக்குத் தேவையானவற்றை பயன்படுத்த பணம் கொடுத்து அவற்றை அன்லாக் செய்ய வேண்டும். அது மட்டுமின்றி, பத்திரிகைகளுக்குச் சந்தா கட்டுவதுபோல மாதக்கணக்கில் அவர்களது லைவ் ஸ்ட்ரீம்களை வேடிக்கைப் பார்ப்பதற்கு சப்ஸ்கிரைப் செய்வதற்கும் பணம் கட்டவேண்டும். இந்தப் பணத்தை சமூக வலைதளமும், கேமர்களும் சரிசமமாக பகிர்ந்துகொள்கின்றனர். யாரோ ஒருவர் பொழுதுபோக்கிற்காக விளையாடுவதை வேடிக்கைப் பார்க்க, நாம் ஏன் இவ்வளவு பணம் செலவு செய்யவேண்டும்? என்ற கேள்வி இந்நேரம் எழுந்திருக்கும். சிலர், இதனை முட்டாள் தனம் என்றும் குறிப்பிட்ட வரலாறு இதற்கு உண்டு.

ட்விட்ச் அப்ளிகேஷனில் அதிகம் பார்க்கப்படும் கேம் என்றால் அது லீக் ஆஃப் லிஜண்ட்ஸ் தான். பிப்ரவரி 8ஆம் தேதி இரவு மட்டும் இரண்டரை லட்சம் பேர் அந்த கேம்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். உலகில் மொத்தம் இரண்டரை லட்சம் முட்டாள்கள் ஒரே இடத்தில் சேர முடியும் என்று நம்புகிறீர்களா?

கேம்களை வேடிக்கை பார்ப்பவர்கள், பணத்தை அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டு தூங்கச் செல்கிறவர்கள் அல்ல. கேமர்கள் எப்படித் தங்களது கேம்களை வீடியோவாக வெளியிட்டு சம்பாதிக்கிறார்களோ, அப்படியே அவற்றை வேடிக்கைப் பார்ப்பவர்களுக்கும் அந்த விளையாட்டை ரெக்கார்டு செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்கள். உதாரணமாக ஒன்றை எடுத்துக்கொள்வோம்.

ஷ்ரௌடு PUBG விளையாட்டில் கொடிகட்டிப் பறந்த சமயம், அவர் பெயரில் எந்த வீடியோவை வெளியிட்டாலும் அது பல லட்சக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டது. அப்போது, ஷ்ரௌடு விளையாடிய முதல் PUBG கேம் எப்படி இருந்தது என்பதை அறிய பலரும் முயற்சித்தனர். ஆனால், ஒரு யூடியூப் சேனலை சேர்ந்தவர்கள் அந்த கேம்பிளேவினைக் கண்டுபிடித்து யூடியூபில் அப்லோடு செய்தார்கள். தற்போது வரை அந்த வீடியோவை 5 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு ரசித்திருக்கின்றனர்; அதாவது ஐம்பது லட்சம். யூடியூப் போன்ற வலைதளங்களில் ஷ்ரௌடு போன்றவர்கள் விளையாடுவதைப் பார்ப்பதற்கே பல லட்சக்கணக்கானோர் இருக்கின்றனர். அவர்களுக்குத் தேவையான வீடியோவை தொகுத்து வழங்குவதே, ட்விட்ச் போன்ற அப்ளிகேஷனில் வெளியாகும் லைவ் ஸ்ட்ரீமிங்கைப் பார்ப்பவர்களின் பலரது வேலையாக இருக்கிறது. அப்படி அவர்கள் வெளியிடும் வீடியோக்கள் கொண்டுவரும் ட்ராஃபிக் மூலம் யூடியூப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் கொடுக்கும் பணமே இவர்களது சம்பாத்தியத்தின் அடிப்படையாக அமைகிறது. இங்கு நாம் பேசிக்கொண்டிருக்கும் அனைத்தும் சில ஆயிரங்களைப் பற்றியதல்ல, லட்சங்களைப் பற்றியது. ஆக, வீடியோகேம்களை விளையாடுபவர்கள் மட்டுமல்லாது, அவற்றை வேடிக்கை பார்ப்பவர்கள் முதற்கொண்டு சம்பாதிக்கக்கூடிய சூழலில் வீடியோகேம் துறை தற்போது வளரந்துள்ளது.

இதை இந்தியாவில் எப்படி பயன்படுத்துகிறார்கள் என அடுத்த பகுதியில் பார்ப்போம்.

விளையாட்டு தொடரும்...

PUBG சொல்லித் தருவது என்ன?

திங்கள், 11 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon