மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

ஒரு கப் காபி

ஒரு கப் காபி

விதை பென்சில்

அழகிய மணவாளன் பென்சில்களின் காதலர். எத்தனை பென்சில்கள் கொடுத்தாலும் அவற்றை எழுதித் தீர்ப்பதை விட சீவி சீவியே அவற்றின் ஜீவனைக் குடித்துவிடுவார்.

நீ படிக்கிற இரண்டாம் வகுப்புக்கு ஒரு நாளைக்கு எத்தனை பென்சில் பயன்படுத்துறே என்று நாம் கடிந்துகொண்டால், ‘அப்பா இங்க பார்’ என்று பென்சில் சீவி வைத்த சீவல்களை எடுத்து என் மேல் எறிவார்.

அப்படிப்பட்ட அழகிய மணவாளனோடு கடந்த வாரம் வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடந்த இந்து ஆன்மிக சேவை கண்காட்சிக்கு சென்றிருந்தேன். ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை தத் ரூபமாக அமைத்திருந்தார்கள், அந்தமான் சிறையை அப்படியே கொண்டுவந்திருந்தார்கள். அதுபற்றியெல்லாம் அழகிய மணவாளனிடம் விளக்கி அழைத்து வரும்போது இயற்கை ஆர்வலர் வெங்கட், எங்களை மறித்து மணவாளன் கையில் ஒரு பென்சில் திணித்தார்.

‘இது விதை பென்சில். நீங்க பென்சில் எழுதி முடிச்சிட்டு தூக்கிப் போடவேணாம். இந்த பென்சிலுக்குப் பின்னால ஒரு சின்ன சேமிப்பு இருக்கு. அதுல விதைகள் இருக்கு. அதை நீங்க உங்க வீட்ல போட்டு முளைக்க வைங்க. செடி முளைக்கும்” என்று அவர் சொல்லச் சொலல் அழகிய மணவாளனுக்கு முகத்தில் புன்னகை அப்போதே முளைத்துவிட்டது.

வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தால், வழக்கமாக ஒரு பென்சிலை அதிகபட்சம் பத்து நாள் பயன்படுத்தும் மணவாளன் ஐந்தே நாட்களில் இந்த விதைப் பென்சிலை சீவி தீர்த்துவிட்டார்.

அப்பா வாசல்ல ஓமவல்லி செடி வச்சிருக்கோமே அந்த மண்ணுக்குள்ள இந்த விதையையும் போடலாம் வா என்று கூப்பிடுகிறார்.

சின்னச் சின்ன மனித விதைகள்தான் நாளை இந்த சமூகத்தின் விருட்சங்கள். அவர்களை நோக்கி குறிவைத்து விதைப் பென்சில்களை உருவாக்கியிருக்கும் அந்த கரங்களை வணங்கலாம். விதை எப்போது முளைக்கும் என்று மணவாளன் காத்திருக்கிறார்.

அழகிய காத்திருப்பு அது!

- ஆரா

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon