மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

ஸ்டாலினுக்கு எதிராக go to temple?

ஸ்டாலினுக்கு எதிராக go to temple?

மக்களவைத் தேர்தலில் வரவுள்ள நிலையில், ஸ்டாலினுக்கு எதிராக go to temple வாசகத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல ஒரு தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது போன்ற சில கருத்துக்கள் ஸ்க்ரின் ஷார்ட் வடிவில் சமூக வலைதளங்களில் சில மாதங்களுக்கு முன்பு உலாவின.‘கோயிலுக்கு செல்லும் யாரும் திமுகவிற்கு வாக்களிக்கத் தேவையில்லை. அப்படி கோயிலுக்கு செல்வோர் வாக்களித்துதான் வெற்றிபெற வேண்டும் என்றால் அப்படிப்பட்ட வெற்றி தேவையில்லை ’ என ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது போன்ற கருத்துக்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

இதனையடுத்து, ‘ஸ்டாலினுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில், அவர் பதிவிட்டது போன்ற போலி ட்விட்டை உருவாக்கி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என திமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் இரண்டு முறை சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் தரப்பிலிருந்து புகார் அளித்த பிறகும் கூட, இதுபோன்ற வாசகங்களை மையப்படுத்தி ஸ்டாலினுக்கு எதிரான விமர்சனத்தை கூர்மைப்படுத்த ஒரு தரப்பினர் திட்டமிட்டுள்ளனராம்.

இதுதொடர்பாக விசாரித்தபோது, ஸ்டாலின் பதிவிட்டது போன்ற அந்த போலி ட்விட்டை மையப்படுத்தி, அவரை இந்துக்களுக்கு எதிரானவர் போல சித்தரித்து மக்கள் மத்தியில் பரப்ப உயர் சாதியிலுள்ள தொழிலதிபர்கள் ஒன்றுகூடி முடிவெடுத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டாலினுக்கு எதிராக go to temple என்ற வாசகம் அடங்கிய 10 லட்சம் டி ஷர்ட்டுகளை பிரிண்ட் செய்து, ‘அனைவரும் கோயிலுக்கு செல்லுங்கள்’ என்று கூறி தமிழகம் முழுவதும் அதனை விநியோகம் செய்யவும் திட்டமிட்டுள்ளனராம்.

இதனை முன்கூட்டியே தெரிந்துகொண்ட திமுக வழக்கறிஞர்கள் சட்ட ரீதியான இதனை முறியடிப்பதற்கு முயற்சித்துவருவதாகவும் கூறப்படுகிறது.

வெள்ளி, 8 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon