மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

அடையாள அணிவகுப்பு: நீதிமன்றம் அறிவுரை!

அடையாள அணிவகுப்பு: நீதிமன்றம் அறிவுரை!

வழிப்பறி, திருட்டு வழக்குகளில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அடையாள அணிவகுப்பு நடத்த வேண்டும் என காவல் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை வழிமறித்து 70,000 ரூபாய், கைக்கடிகாரம், இருசக்கர வாகனத்தைக் கொள்ளையடித்துச் சென்றதாகப் போலீசாரிடம் புகாரொன்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களின் ஜாமீன் மனுக்கள் குறித்து நேற்று (பிப்ரவரி 8) விசாரணை மேற்கொண்டார் உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். அப்போது வழிப்பறி, திருட்டு வழக்குகளில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அடையாள அணிவகுப்பு நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களை முறையாக அடையாளம் காண முடியாவிட்டால், அது புலன் விசாரணையைப் பாதிக்கும் எனத் தெரிவித்த நீதிபதி, அடையாள அணிவகுப்பு நடத்துவதன் மூலம் வழக்கின் புலன் விசாரணை சரியான பாதையில் செல்வதைக் காவல் துறையினர் உறுதி செய்துகொள்ள முடியும் என்று கூறினார். அதனால், அடையாள அணிவகுப்பு நடத்த வகை செய்யும் சட்டப் பிரிவைப் பற்றிக் காவல் துறையினருக்குத் தெளிவுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது என நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டார்.

அடையாள அணிவகுப்பு நடத்துவதன் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள முடியும் எனக் கூறிய நீதிபதி, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

வெள்ளி, 8 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon