மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

பாலசரஸ்வதி: மரபில் ஊறிய கலகக்காரர்

பாலசரஸ்வதி: மரபில் ஊறிய கலகக்காரர்

டக்ளஸ் எம்.நைட் ஜூனியர்

இன்று (பிப்ரவரி 9) பாலசரஸ்வதி நினைவு தினம்

இருபதாம் நூற்றாண்டின் மகத்தான நிகழ்த்துக் கலைஞர்கள், இசைக் கலைஞர்களில் ஒருவர் தஞ்சாவூர் பாலசரஸ்வதி (1918-1984). அவர் தேர்ச்சி பெற்றிருந்த பரதநாட்டியம் எனப்படும் நடனக் கலையின் தென்னிந்தியாவில் உருவான மரபுசார் கலை. இசை, நடனம், பிரத்யேகமான / தனித்துவமிக்க நாடகீய உத்திகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்ட கலை / ஒருங்கிணைக்கும் கலை இது. பாலசரஸ்வதியின் கலையும் வாழ்வும் மரபின் இதயத்தை / ஆதாரத்தை வரையறுத்தன. இன்று இந்தியாவின் செவ்வியல் நடன வகைகளில் ஒன்று எனச் சொல்லப்படும் பரதநாட்டியத்தை மறுஉருவாக்கம் செய்வதற்கான அடிப்படையாக இவரது வாழ்வும் கலையும் விளங்கின.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் மரபுசார் கலைஞருக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டது. குறைந்தபட்சம், கலையின் புதிய மையங்களாக மாறிவந்த சென்னைபோன்ற நகரங்களில் இது நிகழ்ந்தது. நவீனமயமாக்கப்பட்ட பண்பாடும் தேசியப் பண்பும் பாலசரஸ்வதியின் உலகின் யதார்த்தத்தைப் புறக்கணித்தன. யதார்த்தம் புராணக் கதை வடிவில் மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடியதாக மாறியது.

பாலசரஸ்வதியின் முக்கியத்துவத்தை இன்று புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நமது கண்ணோட்டத்தின் தளைகளிலிருந்து நாம் வெளியே வர வேண்டும். மேலும் பெரிய, வியப்புக்கு ஆட்படக்கூடிய கண்களின் வழியாக, மரபுசார் பரதநாட்டியத்தின் பாரம்பரியத்தைத் தழுவிக்கொண்ட உலகை நாம் காண வேண்டும்.

அண்மைக் காலத்தோடு ஒப்பிட்டால்கூட இந்தியாவின் சமகால யதார்த்தம் மாறுபட்டது. 1918இல், பாலசரஸ்வதி பிறந்தபோது இருந்த பண்பாட்டு, சமூக யதார்த்தங்கள் பெருமளவில் மாறுபட்டவை. எனவே அவற்றைத் துல்லியமாகப் புரிந்துகொள்வது கடினம். காலனியாதிக்கத்துக்கு ஆட்பட்ட, மிகவும் நைந்துபோயிருந்த, ஒன்றுக்கொன்று உறவாட முடியாதவை என்று தோற்றமளித்துக்கொண்டிருந்த பன்மைத்தன்மையைக் கொண்டிருந்த தேசமான இந்தியா தன்னைத் தானே மறுகண்டுபிடிப்பு செய்துகொள்ள வேண்டிய சூழலை எதிர்கொண்டது. ஒடுக்குமுறையையும் குழப்ப நிலையையும், தவறான கண்ணோட்டங்களையும் பொய்மையையும் புரட்டையும் வெற்றிகொண்டு, அதன் மூலம் சுய-அங்கீகரிப்பையும் பெருமிதத்தையும் அடையுமளவுக்கு முதிர்ச்சி அடைந்து இந்த மறுகண்டுபிடிப்பை இந்தியா எதிர்கொண்டது.

பாலசரஸ்வதியின் குடும்பம், கலையைப் பேணிவந்த, கலையையே தமது தொழிலாகக் கொண்ட நூற்றுக்கணக்கான குடும்பங்களில் மிகவும் புகழ்பெற்ற குடும்பம். 100 ஆண்டுகளுக்கு முன்பு நடன மரபை இந்தக் குடும்பங்கள் மட்டுமே பேணிவந்தன.

தங்களையும் தங்கள் பண்பாட்டையும் மறுவரையறை செய்துகொள்ள முயன்றவர்களில் ஒருவர் பாலசரஸ்வதி. ஆனால், அவர் தனது மரபுக்கு உண்மையாக இருந்தார். புராணிகத்தன்மை நிரம்பிய கடந்த காலத்தை மறுகட்டுமானம் செய்வதன் மூலம் இந்தியாவின் மகத்துவத்தை வரையறுக்கும் முயற்சியை அவர் ஏற்கவில்லை. கொடூரமான தாக்குதல்களையும் கலாச்சார ரீதியான ஒடுக்குமுறையையும் தாண்டித் தன் உயிரைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் கலையின் அமைப்பையும் அதன் நடைமுறையையும் தொடர்ந்து பேணிவருவதன் மூலம் அந்த மகத்துவத்தின் உருவமாகத் திகழ்ந்தார்.

பாலசரஸ்வதியின் கதை தாய்வழி மரபுக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒருங்கமைக்கப்பட்ட சமூக அமைப்பைப் பின்புலமாகக் கொண்டது. இந்த அமைப்பில் பெண்கள்தாம் குடும்பத் தலைவர்கள். இந்தியாவிலும் உலகின் பிற இடங்களிலும் உள்ள சில குடும்பங்களில் இந்த அமைப்பு இன்னமும் நடைமுறையில் உள்ளது. தேவதாசி என்று சில சமயம் அழைக்கப்பட்ட இந்தச் சமூகத்தினர், இன்று இந்தியாவில் பிரபலமாக இருக்கும் இசை, நடனம் முதலான பல்வேறு மரபுகளைத் தொன்றுதொட்டுப் பாதுகாத்துவருபவர்களாக அங்கீகாரம் பெற்றாலும், பொதுச் சமூகத்தில் முறையான விதத்தில் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு இவர்களுக்குக் கிடைத்ததில்லை.

பல விதமான பெண்களையும் அவர்களுடைய குடும்பங்களையும் குறிப்பிடுவதற்கு தேவதாசி என்னும் சொல் பயன்பட்டுவந்தது. 1901இல் மெட்ராஸ் பிரஸிடென்ஸியின் பிரிட்டிஷ் நிர்வாகம் வெளியிட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் தேவதாசி என்னும் சொல் ஏழு விதமான பொருள்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. நடனமாடுதல், பாடுதல் ஆகியவற்றை நிகழ்த்துக் கலைகளாகப் பயின்றுவரும் பெண்களைக் குறிப்பது அவற்றில் ஒன்று. இசை வேளாளர் உள்ளிட்ட வேறு பெயர்களிலும் அந்தச் சமூகம் அறியப்பட்டிருந்தது. அச்சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் பிள்ளை, முதலியார் ஆகிய குடும்ப / சாதிப் பெயர்களைத் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் வைத்துக்கொள்ளும் வழக்கமும் இருந்தது.

இன்று தேவதாசி என்னும் சொல் பொறுப்பற்ற / விவரமற்ற முறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சில சமயம் தவறான பொருளிலும் இழிவுபடுத்தும் வகையிலும் பயன்படுத்தப்படுகிறது. தேவதாசிக் குடும்பங்களில் பெரும்பாலானவை வேளாண் தொழிலின் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை அமைத்துக்கொண்டன. குடும்பத்தின் சில உறுப்பினர்களே இசை, நடனக் கலைஞர்களாக விளங்கினார்கள். தேவதாசிகளின் வரலாறு மிகவும் சிக்கலானது. இந்திய வரலாற்றில் பல்வேறு சமூக, சமூக-சமயப் பிரச்சினைகளோடு தொடர்புகொண்டது.

18ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூர் அரண்மனையில் இருந்த பாப்பம்மாள் என்னும் இசை, நடனக் கலைஞரின் ஏழாவது தலைமுறையைச் சேர்ந்தவர் பாலசரஸ்வதி. இசையும் நடனமும் பாப்பம்மாளின் காலத்திலிருந்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு இடையறாமல் பயணித்துவந்தது. 20ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாலசரஸ்வதியின் குடும்பத்தினர், பாப்பம்மாளின் எள்ளுப் பேத்தி வீணை தனம்மாளைத் தங்களது கலையின் ஊற்றுக்கண்ணாக அடையாளம் காண்கிறார்கள். 1867இல் பிறந்த தனம்மாளின் ரத்தத்திலேயே இசை ஊறியிருந்தது. அவர் குடும்பத்தின் தலைவராக இருந்தார்.

பாலசரஸ்வதியோடு உணர்வுபூர்வமாக ஈடுபாடு கொண்டவர்கள் உலகம் முழுவதிலும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அதற்கான தனித்த காரணம் இருக்கிறது. பாலசரஸ்வதியின் இயல்பு அப்படிப்பட்டது. எண்ணற்றவர்களின் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் அவரது மகத்துவத்துக்கு ஒரு சான்று. பாலசரஸ்வதியுடன் நட்பு கொண்ட அனைவரும் அதைத் தனிப்பட்ட முறையில் மிகவும் நெருக்கமான உறவாகவே கருதினார்கள். பிறருடன் உறவாடும்போது முன்னெச்சரிக்கையோடு நடந்துகொள்ள பாலசரஸ்வதிக்குத் தெரியாது. யாரையாவது நம்பிவிட்டால் அவரோடு முழுமையாக நட்புக் கொள்வதும் அவர் மிக எளிதில் தன்னை அணுக அனுமதிப்பதும் அவரது இயல்பு. பாலசரஸ்வதியின் இந்த பலவீனம் அவரைப் பாதித்துவிடாமல் காப்பாற்றுவதற்காக அவர் மகள் கடுமையாக முயற்சிசெய்தார். இந்த அளவுக்கு நெருக்கமாகப் பழகியதால் அவரை அறிந்தவர்கள் அனைவரும் பாலசரஸ்வதிக்கென்று உள்ள பார்வை, உள்ளுணர்வு ஆகியவற்றை அறிவார்கள்.

கற்றுத்தருவதிலும் பகிர்ந்துகொள்வதிலும் இந்தச் குடும்பத்தைச் சேர்ந்த கலைஞர்களுக்கு இருந்த அபாரமான ஆற்றல் இவர்களுடைய சிறந்த பண்புகளில் ஒன்று. தங்கள் கலை, கலை சார்ந்த அறிவு ஆகியவற்றுக்கு வளமூட்டுவதிலும் இவற்றைக் கற்றுத்தருவதிலும் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பாலசரஸ்வதியும் அவரது குடும்பத்தினரும் அசாதாரண உழைப்பைச் செலுத்தினார்கள். இன்றைய தலைமுறையைச் சேர்ந்த பல கலைஞர்களிடத்தில் இந்தக் குடும்பத்தின் பாணி, அவர்கள் வசம் இருந்த கலைக் களஞ்சியம் / கலைத் தொகுப்பு ஆகியவற்றின் செல்வாக்கு / தாக்கம் இருக்கிறது.

பாலசரஸ்வதியின் தம்பி விஸ்வநாதன் முதல் முதலில் 1958இல் அமெரிக்காவுக்குச் சென்ற பிறகு அவரது குடும்பத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் வட அமெரிக்கா, ஐரோப்பா, கிழக்கு ஆசியா ஆகிய இடங்களுக்குச் சென்று கற்பித்திருக்கிறார்கள். இந்தியாவின் நிகழ்த்துக் கலைகளைக் குறித்த உலகின் புரிந்துணர்வுக்கு இந்தக் குடும்பம் செலுத்தியிருக்கும் பங்களிப்பு அசாதாரணமானது. பாலசரஸ்வதியின் குடும்பத்தினரிடமிருந்து கற்றுக்கொண்ட எண்ணற்றவர்களில் நானும் ஒருவன். ஆனால், இந்தக் குடும்பத்தினருக்கு மறுக்கப்பட்ட உரிமைகள், பொதுச் சமூகத்தில் இவர்களுடைய நிலை ஆகியவற்றைப் புரிந்துகொள்ள எனக்குப் பல ஆண்டுகள் ஆயின. சமுதாயத்தில் அவருக்கு இன்று இருக்கும் மகத்தான படிமத்தை வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட பெரும் சிரமங்களின் பின்னணியில் வைத்தே மதிப்பிட வேண்டும் என்பதற்கான தேவையை இந்த நூலை எழுதும்போது நான் உணர்ந்தேன்.

இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியிலும் தென்னிந்திய நடன வரலாற்றில் பாலசரஸ்வதி அலாதியானதொரு இடத்தைப் பெற்றிருக்கிறார். மரபுசார் கலை மற்றும் சமூகத்தின் பிரதிநிதியாக அறியப்பெற்றிருக்கிறார். அவரது பங்களிப்பு இல்லையேல் இந்தக் கலையும் சமூகமும் கிட்டத்தட்ட மறைந்துபோயிருக்கும். இது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு அவர் தீவிரமான கலகக்காரர் என்பதும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த, முழுமையான நவீனக் கலைஞர் என்பதும் உண்மை.

(பாலசரஸ்வதி: அவர் கலையும் வாழ்வும் என்னும் நூலில் இடம்பெற்ற முன்னுரையின் சுருக்கமான வடிவம். தமிழில்: அரவிந்தன்)

பாலசரஸ்வதி: அவர் கலையும் வாழ்வும் – டக்ளஸ் எம்.நைட் ஜூனியர், க்ரியா வெளியீடு, விலை ரூ. 495.

https://www.commonfolks.in/books/d/balasaraswathi-avar-kalaiyum-vaazhvum

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon