மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

ஜிஎஸ்டி தொகை வழங்குவதில் தாமதம்: தவிக்கும் தமிழகம்!

ஜிஎஸ்டி தொகை வழங்குவதில் தாமதம்: தவிக்கும் தமிழகம்!

ஜிஎஸ்டி தொகையை தமிழ்நாட்டுக்கு அளிப்பதில் மத்திய அரசு தாமதத்தை ஏற்படுத்துவது மாநில நிதிநிலையை பாதிப்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று (பிப்ரவரி 8) சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் தமிழகத்துக்கு வந்து சேர வேண்டிய பங்கை அளிக்காமல் மத்திய அரசு தாமதப்படுத்துவதாக அப்போது ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “பொருட்கள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டியை) சிறப்பாகச் செயல்படுத்தும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ள நிலையில், ஜிஎஸ்டி வருவாயில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் தமிழ்நாடு பெற்றுள்ளது.

எனினும் 2017-18 நிதியாண்டில் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய ரூ.5,454 கோடியும், ரூ.455.6 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையும் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டுக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை. இந்த நிலுவைத் தொகையை விடுவிப்பதில் மத்திய அரசு செய்யும் தாமதம் மாநிலத்தின் நிதிநிலையைப் பாதித்துள்ளது” என்றார்.

மேலும், வரவு செலவுத் திட்டங்களுக்கான நிதி ஆதாரங்கள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “மாநிலத்தின் வருவாயில் வணிக வரிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஜிஎஸ்டியை அமல்படுத்தியதால் ஏற்கெனவே மாநிலங்களுக்கு இருந்த குறைந்த வரி விதிப்பு அதிகாரங்களைக் குறைத்து, மாநிலங்கள் வரி வருவாய் ஈட்டும் திறனை மேலும் குறைத்துள்ளது.

ஜிஎஸ்டியில் குறைக்கப்பட்டு வரும் வரி விகிதங்கள், இணையதளத்தில் நமூனாக்களை தாக்கல் செய்வதில் நிலவும் சிக்கல்கள், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் மாநிலங்களின் பங்கை விடுவிப்பதிலும், உறுதி செய்யப்பட்ட இழப்பீட்டை விடுவிப்பதிலும் மத்திய அரசு காட்டும் தாமதம் போன்றவை இதன்மூலமான வரி வருவாயை நம்பியிருக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் நிதி நிலைமைக்குச் சவாலை ஏற்படுத்துகிறது” என்றார்.

வெள்ளி, 8 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon