மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

அதிமுக ஆலோசனைக் கூட்டம்: மிஸ்ஸிங் மதுசூதனன் - புறக்கணித்த தம்பிதுரை

அதிமுக ஆலோசனைக் கூட்டம்:  மிஸ்ஸிங் மதுசூதனன் - புறக்கணித்த தம்பிதுரை

அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று பிப்ரவரி 8 ஆம் தேதி தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் கூட்டணி யாரோடு என்பதை தீர்மானிக்கும் கூட்டம் என்று நிர்வாகிகள் அளவில் மட்டுமல்ல, கட்சிக்கு வெளியேயும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் நேற்று நடந்தக் கூட்டம் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

இந்தக் கூட்டத்துக்காக தலைமைக் கழக அறிவிப்பை அடுத்து அனைத்து நிர்வாகிகளுக்கும் போன் மூலமே அழைப்பு விடுக்கப்பட்டது. அழைப்பு விடுக்கும்போதே பலர், ‘என்னத்த முடிவெடுக்கப் போறமோ?’ என்றுதான் அலுத்துக் கொண்டனர்.

அதிமுகவின் ஒவ்வொரு நிகழ்வும் அவைத் தலைவர் தலைமையில்தான் நடக்க வேண்டும் என்பது கட்சி விதி. ஆனால் நேற்றைய கூட்டத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு உடல் நலம் சரியில்லை என்று காரணம் கூறப்பட்டாலும் கட்சியில் நடக்கும் நிகழ்வுகளால் அவர் ஏதோ வருத்தத்தில் உள்ளார் என்பதும் இதற்குக் காரணம்.

அவைத் தலைவர் இல்லாமல் நடந்த கூட்டத்தில் வழக்கம்போல கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிசாமி, கடைசியில் ஓ.பன்னீர் என்று நான்கு பேரே பேசினார்கள்.

கூட்டம் முடிந்த பின் சில தலைமைக்கழக நிர்வாகிகளிடம் பேசினோம்.

“பூத் கமிட்டி பணிகள் இன்னும் பாதிக்கு மேல் நடக்கவே இல்லை. அதைப் பற்றித்தான் எடப்பாடியும் ஓ.பன்னீர் செல்வமும் வருத்தப்பட்டு பேசினார்கள். மற்றபடி கூட்டணி பற்றி எதுவுமே பேசவில்லை. எடப்பாடி பேசும்போது அதிமுகவினர் டிவிகளில் இஷ்டத்துக்குப் பேட்டி கொடுக்கிறீர்கள். அதற்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. அதனால் பேட்டி கொடுப்பதைத் தவிருங்கள், அல்லது யோசித்து பேட்டி கொடுங்கள் என்று சொன்னார். ஓ.பன்னீர் பேசும்போது நல்ல கூட்டணி அமையும், அதற்கு நேரமிருக்கு என்றுதான் சொன்னாரே தவிர பன்னீர் வேறு எதுவும் பேசவில்லை. சுமார் 50 நிமிடம் நடந்த கூட்டத்தில் இதுதான் நடந்தது.

ஆனால் அண்மைக் காலமாக பாஜகவைக் கடுமையாக விமர்சித்து வரும் கொள்கைப் பரப்புச் செயலாளரான தம்பிதுரை இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துவிட்டார். அவர் நாடாளுமன்றப் பணிகளுக்காக டெல்லியில் இருக்கார்னு சொல்லப்பட்டது. ஆனால் அவர் வேண்டுமென்றே டெல்லி போய்விட்டார். மேலும் பல எம்.பி.க்களும், சில நிர்வாகிகளும் வரவில்லை” என்றனர்.

“மார்ச் மாதம் கூட்டம் நடந்தா கூட இப்படித்தான் பூத் கமிட்டி பற்றி பேசிக்கிட்டிருப்பாங்க. கூட்டணி பத்தி அவங்க ஏதோ ஒரு முடிவெடுத்துட்டாங்க. அதனாலதான் தம்பிதுரையண்ணன் கூட்டத்துக்கு வரல. ஆனா இப்ப அறிவிக்காம காலம் கடத்துறாங்க. இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ” என்று கூறினார் சென்னைக்கு அருகே உள்ள மாவட்டச் செயலாளர் ஒருவர் நம்மிடம்.

கூட்டம் முடிந்து வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் இருவரும் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசவில்லை. அண்ணன் வந்து (பன்னீர்) பேசுவார் என்று சொல்லிவிட்டு எடப்பாடி சென்றுவிட, திங்கள் கிழமை உங்ககிட்ட பேசுறேன் என்று சொல்லிச் சென்றுவிட்டார் பன்னீர்.

பின் வழக்கம்போல் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளான வருகிற 24-ந்தேதி ஏழை மக்கள் இருக்கும் இடத்துக்கு தேடிச்சென்று அறுசுவை உணவு, இலவச சீருடை, ஆதரவற்றோர்-முதியோர் இல்லங்களில் உணவு போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் செய்ய வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பூத் கமிட்டிகள் அமைத்து, எதிர் வரும் தேர்தலில் அ.தி.மு.க. இமாலய வெற்றி பெறும் வகையில் பணிகள் அமையவேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது” என்றார் ஜெயக்குமார்.

-ஆரா

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon