மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

ராமலிங்கம் படுகொலை: ஸ்டாலின், கி.வீரமணி கண்டனம்!

ராமலிங்கம் படுகொலை: ஸ்டாலின், கி.வீரமணி கண்டனம்!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் பிப்ரவரி 5 ஆம் தேதி நள்ளிரவு பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவரது கொலை தொடர்பாக இதுவரையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதமாற்றத்தை எதிர்த்ததன் காரணமாகவே ராமலிங்கம் கொல்லப்பட்டார் என்றும் செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் இப்படுகொலைக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முக.ஸ்டாலின் இதுகுறித்து பிப்ரவரி 8ஆம் தேதி தனது ட்விட்டர் பதிவில், “ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த கொலையில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தி விரைவில் தண்டனை பெற்றுக் கொடுத்து இதுபோன்ற வன்முறைகளுக்கு முடிவு கட்ட வேண்டும். இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், எந்த மதத்தினராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தமிழகத்தில் நிலவும் பாரம்பரியமிக்க மத நல்லிணக்கத்தை போற்றிப் பாதுகாக்க அ.தி.மு.க அரசு முன்வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இதுதொடர்பாக பிப்ரவரி 8ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சில தாழ்த்தப்பட்ட ஜாதியினர் இசுலாம் மதத்திற்கு மாற்றப்பட்டனர் என்பதை அப்பகுதியில் உள்ள பாமகவின் பொறுப்பாளர் இராமலிங்கம் என்பவர் கண்டித்தார் என்பதற்காக, அவரை சிலர் தாக்கி கொலை செய்தார்கள் என்ற செய்தி அதிர்ச்சியூட்டக் கூடியதாகும். அவரது கொலைக்கு இதுதான் காரணமா? அல்லது வேறு காரணங்கள், தனிப்பட்ட பிரச்சினைகளால் ஏற்பட்ட பகைமையின் விளைவா? என்று ஆராயவேண்டியதும், குற்றவாளிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுத்து தண்டனை வாங்கித் தருவதும் காவல்துறையின் கடமையும், பொறுப்பும் ஆகும்” என்று கூறியுள்ளார்.

ராமலிங்கம் கொலையில் தொடர்புடையவர்களுக்கு 2 ஜமாத் நிர்வாகம் பண உதவி செய்யப்போவதாக வாட்ஸ் அப்பில் எடுக்கப்பட்ட ஸ்கிரீன் ஷாட் ஒன்று சமூக வலைதளங்களில் கடந்த இருநாட்களாக வேகமாகப் பரவி வந்தது. பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவும் அந்த ஸ்கிரீன் ஷாட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ”கொலை குற்றவாளிக்கு மத ரீதியிலான ஆதரவு. இந்துவே இனியும் ஏமாறாதே” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு திருபுவனம் ஜமாத் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருபுவனம் ஜமாத் பிப்ரவரி 8ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராமலிங்கம் கொலையில் தொடர்புடையவர்களுக்கு 2 ஜமாத் நிர்வாகம் பண உதவி செய்யப்போவதாக சமூக வலைதளங்களில் சில விசமிகளால் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. இது முற்றிலும் தவறானது. எந்தவித ஆதாரமும் அற்றது. இந்த அவதூறு பிரச்சாரத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது. மேலும், “இந்த அறிவிப்புக்குப் பின்னும் அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, 8 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon