மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

இந்தியாவுக்கே திரும்பியதுபோல உணர்ந்தேன்!

இந்தியாவுக்கே திரும்பியதுபோல உணர்ந்தேன்!

இந்திய ரசிகர்களின் ஆரவாரத்தால் இந்தியாவுக்கே திரும்பியதுபோல உணர்ந்ததாக நியூசிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நாதன் மெக்கலம் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. ஒரு நாள் போட்டித் தொடருக்கு பின்னர் டி20 போட்டிகளில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. ஆக்லாந்தில் உள்ள எடன் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 158 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 162 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. முக்கியமாக, ரோஹித் சர்மா 29 பந்துகளில் 50 ரன்களையும், ரிஷப் பந்த் 28 பந்துகளில் 40 ரன்களையும் குவித்தனர். இந்த போட்டியை நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான நாதன் மெக்கலம் தனது குடும்பத்துடன் கண்டுகளித்தார்.

எடன் பார்க் மைதானத்தில் ஏராளமான இந்திய ரசிகர்கள் இந்திய கொடியுடன் ஆரவாரம் செய்தனர். அதைக் கண்ட மெக்கலம் தனது ட்விட்டர் பக்கத்தில், “கிரிக்கெட் போட்டியை காண குடும்பத்தினரை அழைத்து வந்தேன். இந்திய ரசிகர்கள் என் குழந்தைகளுக்கு நல்ல அனுபவத்தை தந்தார்கள். ஆரவாரமான உற்சாகமான ரசிகர்கள். இந்திய அணிக்காகவும், வீரர்களுக்காகவும் இந்திய ரசிகர்கள் அளிக்கும் உற்சாகத்தை நான் விரும்புகிறேன். இந்தியாவுக்கே திரும்ப சென்றது போல உணர்ந்தேன்” என்று தெரிவித்துள்ளார். இவர் ஐபிஎல் போட்டிகளில் புனே வாரியர்ஸ், சன் ரைசர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon