மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

குழந்தை திருமணத்தில் முதலிடம் வகிக்கும் மாநிலம்!

குழந்தை திருமணத்தில் முதலிடம் வகிக்கும் மாநிலம்!

இந்தியாவிலேயே குழந்தை திருமணத்தில் முதலிடம் வகிக்கும் மாநிலமாக மேற்கு வங்கம் உருவெடுத்துள்ளது.

பொதுவாக பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில்தான் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடப்பதாக ஆய்வுகள் தெரிவித்தன. ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தை திருமணம் என்பது பாரம்பரியமாகவே இருந்தது. ஆனால் தற்போது உண்மை நிலவரம் வேறு விதமாக மாறியுள்ளது. 2015-16ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார சர்வே-4 வழங்கும் தகவல்களின்படி, பீகார், ராஜஸ்தான், ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குழந்தை திருமணங்கள் கணிசமாக குறைந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 15-19 வயது வரம்பிலான பெண்களில் 6.4 விழுக்காட்டினர் மட்டுமே திருமணம் செய்துகொள்கின்றனர். ஆனால் மேற்கு வங்கத்திலோ குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல உயர்ந்துள்ளது.

இமாசலப் பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் குழந்தை திருமணங்கள் குறுகிய அளவில் உயர்ந்துள்ளன. 15-19 வயது வரம்பிலான பெண்களில் திருமணம் செய்துகொள்வோரின் தேசிய சராசரி 11.9 விழுக்காடாக உள்ளது. 2005-06ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார சர்வேயில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடக்கும் மாநிலங்களில் பீகார் (47.8%) முதலிடத்திலும், அடுத்தடுத்த இடங்களில் ஜார்கண்ட்(44.7%), ராஜஸ்தான்(40.4%), மேற்கு வங்கம் (34%) ஆகிய மாநிலங்களும் இருந்தன. 10 ஆண்டுகளுக்கு பிறகு பீகார், ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் குழந்தை திருமணத்தின் தாக்கம் 20 விழுக்காடுப் புள்ளிகள் குறைந்துள்ளது. ஆனால் மேற்கு வங்கத்திலோ வெறும் 8.4 விழுக்காட்டுப் புள்ளிகளே குறைந்துள்ளது.

வயது வரம்பின் அடிப்படையில் பார்த்தால், திருமணம் செய்துகொள்ளும் 15 வயது பெண்களின் விகிதம் 2.7 விழுக்காடாக குறைந்துள்ளது. 16 வயது பெண்களின் விகிதம் 5.6 விழுக்காடாகவும், 17 வயது பெண்களின் விகிதம் 11 விழுக்காடாகவும், 18 வயது பெண்களின் விகிதம் 19.8 விழுக்காடாகவும், 19 வயது பெண்களின் விகிதம் 20.5 விழுக்காடாகவும் இருந்துள்ளது.

குழந்தை திருமணங்களின் தாக்கம் நகரங்களை விட கிராமங்களில் அதிகளவில் இருந்துள்ளது. குழந்தை திருமணங்களின் விகிதம் நகர்ப்புறங்களில் சராசரியாக 6.9 விழுக்காடாகவும், கிராமப்புறங்களில் சராசரியாக 14.1 விழுக்காடாகவும் இருந்துள்ளது. வருமானம், கல்வி ஆகியவற்றின் அடிப்படையிலேயே குழந்தை திருமணங்களிலிருந்து பெண்கள் தப்பித்துக்கொள்கின்றனர் என்பது ஆய்வில் தெரியவருகிறது.

சமூகங்களின் அடிப்படையில் பார்த்தால், குழந்தை திருமணங்களின் தாக்கம் அதிகபட்சமாக பழங்குடியினரிடையே 15 விழுக்காடாகவும், அடுத்தபடியாக பட்டியலின மக்களிடையே 13 விழுக்காடாகவும் இருந்துள்ளது. எனினும் சில மாநிலங்கள் இதற்கு விதிவிலக்காக உள்ளன. உதாரணமாக, மகாராஷ்டிராவில் ஒட்டுமொத்த குழந்தை மணப்பெண்களின் எண்ணிக்கையில் 38 விழுக்காட்டினர் முன்னேறிய சாதிகளை சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர்.

வருமான அடிப்படையில் பார்க்கும்போது, ஏழை பெண் குழந்தைகளே திருமணத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பணக்காரர்களில் 5.4 விழுக்காடு குழந்தைகளும், நடுத்தர பெண்களில் 12.7 விழுக்காடு குழந்தைகளும். ஏழைகளில் 16.6 விழுக்காடு குழந்தைகளும் திருமணத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வியறிவின் அடிப்படையிலும் இந்த வேறுபாடுகள் உள்ளன. கல்வியறிவே இல்லாத பெண்களில் 30.8 விழுக்காட்டினரும், ஆரம்பக் கல்வி பெற்றவர்களில் 21.9 விழுக்காட்டினரும், இடைநிலை கல்வி பெற்றவர்களில் 10.2 விழுக்காட்டினரும், உயர்கல்வி பெற்றவர்களில் 2.4 விழுக்காட்டினரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon