மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

குறையும் வாராக் கடன்கள்!

குறையும் வாராக் கடன்கள்!

பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன்கள் ரூ.31,000 கோடி வரையில் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வங்கிகளின் வாராக் கடன்கள் அதிகரித்து வருவது குறித்து பிப்ரவரி 8ஆம் தேதி மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சரான ஷிவ் பிரதாப் சுக்லா எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், 2017ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் ரூ.8,95,601 கோடியாக இருந்த பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன்கள், 2018ஆம் ஆண்டின் ஏப்ரல் - டிசம்பர் மாதங்களில் 8,64,433 கோடியாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதாவது பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன்கள் இக்காலத்தில் ரூ.31,000 கோடி வரையில் குறைந்துள்ளது.

திறனிருந்தும் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் கடனாளிகளால்தான் வாராக் கடன்கள் அதிகரித்து வருவதாகவும், அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் சீர்திருத்த நடவடிக்கைகளால் வாராக் கடன்களின் அளவு குறைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குத் தற்போதைக்கு அதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று பதிலளித்தார். வங்கி சீரமைப்புத் திட்டத்தின் கீழ் நலிந்த பொதுத் துறை வங்கிகள் பலப்படுத்தப்பட்டு வருவதாலும், கடன் வசூலில் மேற்கொள்ளப்படும் கடுமையான நடவடிக்கைகளாலும் வாராக் கடன்கள் குறைந்து வருகின்றன. அரசு தரப்பிலிருந்து வங்கிகளுக்கு மூலதன உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon