மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

போலீஸ் கமிஷனர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்!

போலீஸ் கமிஷனர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்!

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணைக்காக ஷில்லாங் சிபிஐ. அலுவலகத்தில் ராஜீவ் குமார் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், விசாரணை நடத்த பிப்ரவரி 3ஆம் தேதி மாலை சிபிஐ அதிகாரிகள் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டுக்குச் சென்றனர். ஆனால், சிபிஐ அதிகாரிகளை உள்ளே அனுமதிக்காமல் அவர்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர். சிபிஐ நடவடிக்கைக்கும், மோடி அரசுக்கு எதிராகவும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மூன்று நாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதற்கிடையே, ராஜீவ் குமார் விசாரணைக்கு ஒத்துழைக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராஜீவ் குமார், பொதுவான ஒரு இடத்தில் சிபிஐ விசாரணைக்காக ஆஜராகி ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதுபோன்று காவல் துறை அதிகாரியிடம் விசாரணை நடத்த 10 பேர் கொண்ட சிபிஐ குழு டெல்லியில் இருந்து கொல்கத்தா விரைந்தது.

ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராவதற்காக நேற்று மாலை கொல்கத்தாவில் இருந்து ஷில்லாங் சென்றார் ராஜீவ் குமார். அவருடன் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் உடன் சென்றனர்.

இந்நிலையில், இன்று காலை சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான ராஜீவ் குமாரிடம் சாரதா நிதி நிறுவன வழக்கில் மாயமான ஆவணங்கள் குறித்தும், இதில் தொடர்புடையவர்கள் குறித்தும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக சிபிஐ இடைக்கால இயக்குநராக இருந்த நாகேஷ்வர ராவ் உத்தரவின் பேரில்தான், ராஜீவ் குமார் வீட்டுக்கு அதிகாரிகள் வந்தனர் என்று கூறப்பட்டது. இதைதொடர்ந்து நேற்று (பிப்ரவரி 8) மேற்கு வங்க போலீசார் கொல்கத்தாவில் உள்ள அங்கீலா மெர்கண்டைல் நிறுவனத்திற்குச் சொந்தமான இரு இடங்களில் சோதனை நடத்தினர். அந்த நிறுவனம் நாகேஷ்வர ராவின் மனைவிக்குச் சொந்தமானது என போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் இதனை நாகேஷ்வர ராவ் மறுத்துள்ளார். போலீசார் சோதனை நடத்திய நிறுவனத்திற்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவிப்பு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon