மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

பயோ பிக்கில் கவனம் செலுத்தும் சானியா

பயோ பிக்கில் கவனம் செலுத்தும் சானியா

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை பாலிவுட் இயக்குநர் ரோனி ஸ்க்ருவாலா இயக்குவதாகச் சானியா மிர்ஸா நேற்று (பிப்ரவரி 8) தெரிவித்துள்ளார்.

வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகவும் ஆரம்பகட்டப் பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாகவும் சானியா தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சானியா செய்தியாளர்களைச் சந்தித்த போது,“இது அருமையான விஷயம். பேச்சுவார்த்தை நடைபெற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. அதை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை சானியா மிர்ஸா மட்டுமே ஆவார்.

“பரஸ்பர புரிதலின் அடிப்படையில் இதன் பணிகள் நடைபெறுகின்றன. இதில் எனது பங்களிப்பு முக்கியமாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால் இது எனது கதை. அதனால் நான் சொல்லியே ஆகவேண்டும். நாங்கள் ஆரம்பகட்டத்தில் தான் இருக்கிறோம். ஆகையால் இன்று இதை அறிவிக்கிறோம். இயக்குநர் திரைக்கதையை எழுத வேண்டும், ஏற்ற நடிகர்களைத் தேர்வு செய்ய வேண்டும். ஒரு நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது” என்று கூறியுள்ளார்.

இந்தியத் திரையுலகில் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் முன்னெப்போதையும் விட அதிகமாக வெளியாகிவருகிறது. பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு திரைப்படமானாலும் விளையாட்டுத் துறையிலிருந்து சற்று அதிகமாகப் படங்கள் வெளியாகின்றன.

ஏற்கெனவே சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, மேரி கோம் உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், துப்பாக்கிச் சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா, மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் பயோ பிக் திரைப்படங்களும் உருவாகி வருகின்றன.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon