மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 19 பிப் 2020

சின்னதம்பியைக் காப்புக்காட்டில் விடத் திட்டம்!

சின்னதம்பியைக் காப்புக்காட்டில் விடத் திட்டம்!

தற்போது திருப்பூர் அருகேயுள்ள கண்ணாடிப்புத்தூரில் இருந்துவரும் சின்னதம்பி யானையை, கும்கி யானைகள் கொண்டு காப்புக்காட்டுக்குள் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை தடாகம், கணுவாய், பன்னிமடை கிராமங்களில் சுற்றி வந்த சின்னதம்பி யானை, கடந்த 25ஆம் தேதி தமிழக வனத் துறையினரால் பிடிக்கப்பட்டது. டாப் ஸ்லிப் காட்டுப் பகுதிக்குள் விடப்பட்ட அந்த யானை ஒரே வாரத்தில் மீண்டும் அங்கலக்குறிச்சி எனும் கிராமத்துக்குள் புகுந்தது. கடந்த 31ஆம் தேதி முதல் தற்போது வரை சின்னதம்பி யானையைக் காட்டுக்குள் விரட்ட முயன்று வருகின்றனர் தமிழக வனத் துறையினர். கலீம், மாரியப்பன் எனும் இரண்டு கும்கி யானைகள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டும் பலன் ஏதும் கிடைக்கவில்லை.

அதே நேரத்தில் தங்களது கரும்பு, நெல், வாழைப் பயிர்களை சின்னதம்பி சேதப்படுத்துவதாகப் புகார் தெரிவித்தனர் அப்பகுதி மக்கள். உடனடியாக அதனைக் காட்டுக்குள் கொண்டுபோய் விட வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், இன்று (பிப்ரவரி 9) திருப்பூர் மாவட்டம் கண்ணாடிப்புத்தூர் ஆற்றுப்படுகையில் இருந்து வருகிறது சின்னதம்பி யானை.

மேட்டுப்பட்டி, மடத்துக்குளம், மைவாடி, சாமிநாதபுரம் பகுதிகளை அடுத்து கண்ணாடிப்புத்தூரில் சுற்றிவரும் சின்னதம்பி யானையை காப்புக்காட்டுக்குக் கொண்டு சென்றுவிட முடிவு செய்துள்ளது தமிழக வனத் துறை. யானையை யாரும் தொந்தரவு செய்யாத வகையில் 24 மணி நேரமும் அது கண்காணிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. அப்பகுதியில் இருந்து காப்புக்காடு 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனால் யானையை அது செல்லும் பாதையிலேயே கொண்டு சென்று காட்டில் விடத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனாலும், கலீம் மற்றும் மாரியப்பன் என்ற இரண்டு கும்கி யானைகளும் விரைவில் அப்பகுதிக்கு அழைத்துவரப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon