மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 20 நவ 2019

“ஜெ”மரண மர்ம விசாரணை: தடை கேட்கும் அப்பல்லோ!

“ஜெ”மரண மர்ம விசாரணை:  தடை கேட்கும் அப்பல்லோ!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் உண்மைத்தன்மை பற்றி விசாரணை நடத்த, ஆறுமுகசாமி ஆணையத்திற்குத் தடை விதிக்கக் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை மனு தாக்கல் செய்துள்ளது.

ஜெயலலிதா மரண மர்மத்தைக் கண்டறிய அமைக்கப்பட்டுள்ள உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம், பல தரப்புகளிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று வருகிறது. ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலாவின் உறவினர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் எனப் பல தரப்பிடமும் விசாரணை நடத்தி வருகிறது.

ஏற்கனவே பல முறை ஆணையத்தின் கால வரம்பு நீட்டிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதிக்குள் விசாரணையை முடிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் விசாரணைக்காக மூன்று முறை சம்மன் அனுப்பியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆணையத்தில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். ஆறுமுகசாமி ஆணையத்தின் குறுக்கு விசாரணையில் தனக்கு எதிரான பல விஷயங்கள் அம்பலத்துக்கு வரும் என பன்னீர் கருதுவதால் அவர் விசாரணைக்கு ஆஜராவதைத் தவிர்த்து வருகிறார் என்று கூறப்பட்டது.

இதற்கிடையில், அப்பல்லோ சார்பில் ஆணையத்தில் மருத்துவர்களை விசாரிக்க,மருத்துவ நிபுணர்கள் குழு வேண்டும் என்று உயர் நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் அங்கே ஆணையத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்படும் பட்சத்தில் பன்னீருக்கு ஒரு தற்காலிக இடைவேளை கிடைக்கும் என்றும் கூறப்பட்டது

இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனை சார்பில் இன்று (பிப்ரவரி 9) உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ”ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்க, நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்களைக் கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்கவேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் தீர்வு காணும் வரை, மருத்துவ விஷயங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆணையத்திற்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது. சசிகலாவும் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு வரும் 11ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon