மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 25 பிப் 2020

இளைய நிலா: இதில் எந்தத் தவறும் இல்லை!

இளைய நிலா: இதில் எந்தத் தவறும் இல்லை!

இளைஞர்களின் உறவுச் சிக்கல்களைத் தீர்க்க என்ன வழி? பகுதி – 13

ஆசிஃபா

சில தினங்களுக்கு முன்பு, இந்த மீம் பார்க்க நேர்ந்தது. பார்த்ததும் சிரிப்புதான் வந்தது!

வெகு நாட்களாக வாசிக்க நினைத்த மறைக்கப்பட்ட பக்கங்கள் கடந்த மாதம் கிடைத்தது. என் படுக்கையின்மீது கிடந்த புத்தகத்தின் அட்டைப் படத்தைப் பார்த்து, என் அம்மா “என்ன புக் இது? இப்டியான புக் எல்லாம் படிக்குற!”, என்று அதிர்ச்சியாகிவிட்டார். பால், பாலினம், பாலின ஒருங்கிணைவு என்பது நாம் நினைப்பது போன்றது கிடையாது என்றும், நாம் தெரிந்துகொள்ள பல விஷயங்கள் இருக்கிறது என்றும் சொன்னேன். “என்னமோ. இதெல்லாம் தெரிஞ்சு என்ன பண்ன போற?”, என்ற கேள்விக்கு நான் ஒன்றும் சொல்லவில்லை.

ஏன் இவை இரண்டையும் குறிப்பிடுகிறேன் என்றால், பாலியல் கல்வி என்ற ஒன்று அறவே இல்லாத ஒரு தலைமுறை வளர்த்த பிள்ளைகள் நாம். அனைத்தைப் பற்றியும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தவர்கள் யாரும் கிடையாதுதான். ஆனால், குறைந்தபட்ச புரிதல்கூட இல்லாமல் ஏன் இருந்துவிட்டார்கள் என்று தோன்றும். பாலியல் ஒருங்கிணைவு (ஒருவரின் பாலுணர்வுசார் ஈர்ப்பில் பிரதானமாக வெளிப்படும் அம்சம் – Sexual Orientarion) என்ற ஒன்று புதிய சொல்லாக இருக்கிறது பலருக்கும். அவர்களின் ‘நியாயமான’ கேள்வி என்பது, “இது தெரியாமல் நாங்கள் நன்றாக இல்லையா?” என்பதுதான்.

இவை தெரியாத தலைமுறையினரின் பிள்ளைகள் மிகப் பெரிய மன உளைச்சலுக்கும் குழப்பத்திற்கும் ஆளாகியிருக்கிறோம். ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு வாழ்க்கை முடிந்துவிட்ட பிறகுதான், திருநர்களைப் பற்றிய மிகச் சிறிய தெளிவு ஏற்பட்டிருக்கிறது. பாலியல் ஒருங்கிணைவு என்ற சொல் அறிமுகமாவதற்கு முன்பு பல பெண்களின் கையில் ஒரு குழந்தை இருந்துவிடுகிறது! பதின் பருவங்களில் ஏற்படும் மாறுபட்ட ஈர்ப்புகளை நட்பு என்ற போர்வைக்குள் மறைத்து வாழும் பலரை எனக்குத் தெரியும்.

நகர்ப்புறங்களில் இருக்கும் மிகக் குறைந்த புரிதல்கூட கிராமப்புறங்களிலும் டவுன்களிலும் இல்லை என்பதுதான் வருத்தமான உண்மை. இயற்கையில் இருக்கும் அடிப்படை வேற்றுமைகளைக்கூட ஏற்க மறுக்கும் பெரும்பான்மையானவர்கள் மத்தியிலேயே நாம் வாழ்கிறோம்.

ஆனாலும், சில பெற்றோர் பெரும்பலமாக இருக்கின்றனர். சட்டப் பிரிவு 377 விவகாரத்தின்போது, தங்கள் பிள்ளைகளுக்காகப் பெருமகிழ்ச்சியாக இருந்த பெற்றோரைக் காண நேர்ந்தது. எந்த இரு பெற்றோரையும் ஒப்பிட்டுப் பேசவே முடியாது. அவரவர் வாழ்க்கை என்ன மாதிரியான அனுபவங்களைக் கொடுக்கிறதோ, அதைப் பொறுத்தே அவரவர் தன்மை இருக்கிறது.

நம் பாலினம், பாலியல் ஒருங்கிணைவு குறித்து நாம் சிந்திக்கும் அதே நேரத்தில், முடிந்தளவு சிறிது சிறிதாக பெற்றோரிடமும், பிறரிடமும் பேச வேண்டும். இது எளிதான காரியம் அல்ல. ஆனால், அவ்வப்போது பேச வேண்டும். அப்படி அவர்களுக்குப் புரிய வைக்க முடியாத பட்சத்தில், நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மிக மிக முக்கியமான விஷயம், நாம் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டோம்; நாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதுதான்.

இந்த சிக்கலில் மாட்டியிருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள், கையறு நிலையை உணர்வார்கள். புரிதல் இருப்பவர்கள் சமாளித்துவிடுவதைப் போல, அனைவரும் சமாளிக்க முடிவது கிடையாது. தனக்கு ஏதோ குறை என்றோ, தான் தவறு செய்வதாகவோ உணரும் நபர்களிடம் நான் பேசியிருக்கிறேன். மதம் உணர்த்தும் கோட்பாடுகளில் சிக்கி உழல்பவர்களும் உள்ளனர். எந்த நம்பிக்கை கொண்டவர்களாயினும், ஆழமாக நம்ப வேண்டியது, புரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுதான்: நமக்குள் இருந்து எழும் உணர்வுகள் இயற்கையானவை, இயல்பானவை; நம் தவறு அதில் எதுவும் இல்லை என்பதுதான். வாய்ப்பு கிடைப்பவர்கள், மறைக்கப்பட்ட பக்கங்கள் நூலை நிச்சயமாக வாசிக்க வேண்டும்!

உங்களுக்கென்று யாருமே இல்லையா?

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon