மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

வீடமைப்புத் திட்டம்: மாநிலங்களுக்கு விருது!

வீடமைப்புத் திட்டம்: மாநிலங்களுக்கு விருது!

வீடமைப்புத் திட்டத்தில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விருதுகள் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நகர்ப்புற ஏழை, எளிய மக்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்தித் தரும் நோக்கத்தில் மத்திய மோடி அரசால் 2015ஆம் ஆண்டின் ஜூன் மாதம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 2015 முதல் 2022ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி வீடுகள் கட்டித்தர இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 15 லட்சம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தை மேலும் துரிதப்படுத்தும் நோக்கத்தில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விருதுகள் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திட்ட அமலாக்கம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டமைப்பில் புதிய தொழில்நுட்பங்கள், மறு மேம்பாடு, கொள்கை முயற்சிகள், திட்டங்களைக் கண்காணித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் சிறப்பு விருதுகளும் வழங்கப்படவுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஒவ்வொரு மாதமும் மக்களின் பார்வைக்கு வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் இதற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன.

வெள்ளி, 8 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon