மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

திமுகவில் இணையும் ரஜினி மக்கள் மன்றத்தினர்!

திமுகவில் இணையும் ரஜினி மக்கள் மன்றத்தினர்!

ரஜினி மக்கள் மன்றத்தின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்பட 350பேர் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தனர். மேலும் பலர் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (பிப்ரவரி 8) திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த, ரஜினி மக்கள் மன்றத்தின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் டி.மதியழகன், திமுகவில் இணைந்தார். இவருடன் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் ரஜினிகுமார், வர்த்தகர் அணிச் செயலாளர் ராஜா, விவசாய அணிச் செயலாளர் பெரியசாமி, தகவல் தொழில் நுட்ப அணிச் செயலாளர் எம்.கேசவராஜ், மாவட்ட துணைச் செயலாளர் ஜெகவீரபாண்டியன் மற்றும் ஒன்றிய, நகர ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 350க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வில் டி.ஆர்.பாலு, பொன்முடி, டி.செங்குட்டுவன் இ.ஜி.சுகவனம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து வரும் 23ஆம் தேதி கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ள விழாவில் ஸ்டாலின் முன்னிலையில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 25,000க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையவுள்ளனராம்.

அரசியலுக்கு வரப்போவதாகவும், வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தார். அவருடைய ரசிகர் மன்றம் ரஜினி மக்கள் மன்றம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அதற்கு தமிழகம் முழுவதும் மாவட்டம், நகரம், ஒன்றியம் வாரியாக நிர்வாகிகள் நியமிக்கும் பணிகளும் நடைபெற்றன. ஆனால், ஒரு வருடத்திற்கு மேலாகியும் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை.

ரஜினி அறிவித்த சமயத்தில் கட்சி ஆரம்பிக்கப் போவதாக தெரிவித்த நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யத்தை ஆரம்பித்து, ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நிலைக்கே வந்துவிட்டார்.

இன்னும் கட்சி ஆரம்பிக்கப்படாத நிலையில், ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா என்ற சந்தேகமும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளிடையே தற்போது எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியில் இருந்துவரும் நிர்வாகிகள் பலர் மாற்று முகாம்களுக்கு தாவிவருகின்றனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் மதியழகன் தற்போது திமுகவில் இணைந்துள்ளார். இன்னும் சில மாவட்ட நிர்வாகிகளும் திமுகவில் இணையலாம் என்றும் கூறப்படுகிறது.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon