மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

பாஜகவுடன் கூட்டணி குறித்து பேசவில்லை: தம்பிதுரை

பாஜகவுடன் கூட்டணி குறித்து பேசவில்லை: தம்பிதுரை

பாஜகவுடன் கூட்டணி குறித்து இதுவரை பேசவில்லை என்று மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார்.

மக்களவைத் துணை சபாநாயகரும் அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை, தொடர்ந்து பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். அதிமுகவுடன் பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் கூட்டணி இறுதியாகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதற்கு எதிர்மறையாகவே தம்பிதுரை கருத்து கூறிவருகிறார். இதற்கிடையே அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் தம்பிதுரை கலந்துகொள்ளவில்லை. கூட்டணி குறித்த அதிருப்தியின் காரணமாகவே அவர் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இன்று (பிப்ரவரி 9) செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரையிடம் பாஜகவுடனான கூட்டணி குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்கிற கதைதான். கூட்டணி குறித்து பாஜகவிடம் இதுவரை நாங்கள் பேசவும் இல்லை. அந்த நிலைக்கும் வரவில்லை. சேர்ந்தால் என்ன ஆகும் என்று திரும்பத் திரும்பக் கேட்டால் என்ன அர்த்தம். அந்த கேள்வியே எழவில்லை” என்று பதிலளித்தார்.

மேலும், “நான் பாஜகவை விமர்சிக்கிறேன் என்று கூறுகிறீர்கள். தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை வளர விடமாட்டோம் என்று தமிழிசை கூறுகிறார். அதற்கு நான் பதில் சொல்லி ஆக வேண்டும் அல்லவா. திராவிடக் கட்சிகள் வரக்கூடாது என்றால் தேசியக் கட்சி என்று சொல்லிக்கொள்ளும் இவர்களை எவ்வாறு நாங்கள் வரவிடுவோம். எங்களுக்கும் தன்மானம் இருக்கிறது. எங்களை யார் மதிக்கிறார்களோ, தமிழகத்துக்கு யார் நன்மை செய்கிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி என்று முதல்வர் தெளிவாகக் கூறிவிட்டார்” என்றும் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon