மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

சென்னையில் மாதிரி வாக்குப்பதிவு!

சென்னையில் மாதிரி வாக்குப்பதிவு!

யாருக்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிந்து கொள்ளும் வசதியுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படும் விதம் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மாதிரி வாக்குப் பதிவு இன்று (பிப்ரவரி 8) நடைபெற்றது.

சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சைபர் நிபுணர் ஒருவர், 2014ஆம் ஆண்டு தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட்டதாகத் தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து வாக்குப்பதிவு ஒப்புகைச்சீட்டு இயந்திர முறையைக் கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. வரும் மக்களவைத் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு ஒப்புகைச்சீட்டு இயந்திர முறை நடைமுறைப் படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

அந்த வகையில் இன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர்கள் யாருக்கும் வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் ஒப்புகைச் சீட்டு வழங்கும் விவிபாட் இயந்திரத்தின் செயல் விளக்க நிகழ்ச்சியைத் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.

அப்போது மாதிரி வாக்குப் பதிவு நடத்தி அந்த இயந்திரம் செயல்படுவது குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது. அதாவது, ”வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்த பின்பு அருகே உள்ள ஒப்புகைச் சீட்டு இயந்திரத்துக்குள் யாருக்கு வாக்களிக்கப்பட்டது என அச்சிடப்பட்ட சீட்டு 7 வினாடிகள் வரை தெரியும்.

பின்னர் அந்தச் சீட்டு தானாகவே இயந்திரத்துக்குள் விழுந்து விடும். இந்தச் சீட்டை வாக்காளர்கள் எடுத்துச் செல்ல முடியாது. இந்தச் சீட்டுகள் வாக்குச்சாவடி மையங்களுக்குக் கொண்டு செல்லப்படும். வாக்கு எண்ணிக்கையில் வித்தியாசம் இருப்பதாகப் புகார் எழுந்தால், இந்தச் சீட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்” என்று விளக்கமளிக்கப்பட்டது.

இந்தச் செயல் விளக்க நிகழ்வில் கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, நாடாளுமன்றத் தேர்தலோடு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதனை நடத்த தயராக இருப்பதாகத் தெரிவித்தார். தொடந்து, இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் சென்னையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடுத்த 10 நாட்களுக்கு இந்தப் பயிற்சி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon