மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

18+ ஓவியா பட டிரெய்லர்!

18+ ஓவியா பட டிரெய்லர்!

18 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய டிரெய்லர் என்று குறிப்பிட்டதும், ஹெட்ஃபோனைப் பயன்படுத்தி பார்க்கவேண்டிய டிரெய்லர் என்றும் கூறியது ஏற்படுத்திய எதிர்பார்ப்பு ஓவியாவின் ‘90 மிலி (90 ml) பட டிரெய்லருக்கு கொஞ்சம் அதிகப்படி என்றே தோன்றியது. ஆனால், டிரெய்லரில் மொத்தமாகப் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார்கள்.

ஆண்களுக்கு மட்டுமாகவே இருக்கும் தமிழ் சினிமாவின் அத்தனை கொண்டாட்டங்களையும் கேள்வியெழுப்பும் விதமாக முழு டிரெய்லரும் அமைந்திருக்கிறது. நான்கு ஆண்கள் சேர்ந்து மது அருந்தும்போது ஏற்படும் சம்பவங்களை வைத்து எத்தனையோ படங்கள் தமிழ் சினிமாவில் வந்துவிட்டன. ஆனால், சில பெண்கள் சேர்ந்து மது அருந்தும்போது நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து வெளியாகும் முதல் படம் இதுவாகத் தான் இருக்கும்.

ஒன்றாக மது அருந்தும் பெண்கள் பேசும் செக்ஸ், உடலமைப்பின் தன்மை என எங்கெங்கோ போகிறது டிரெய்லர். பொதுவெளியில் பேசத் தவிர்க்கும் பல விஷயங்களைப் போகிற போக்கில் வசனங்களாக ஓவியா அள்ளித் தெளிக்கிறார். ‘சிதறியது, கோப்பையில் இருந்த மது மட்டுமல்ல; என் வாழ்க்கையும்தான்’ போன்ற இலை மறை காய் வசனங்களையெல்லாம் கேட்டவர்கள், ஹெட்செட்டை தூர வீசிவிட்டு ஓடிவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

‘நான் பிக் பாஸையே பார்த்தவடா’ என ஓவியா பேசும் வசனத்துக்கு தியேட்டரில் கிளாப்ஸ் நிச்சயம். ஆனால், அதற்கு முன்பே படத்துக்கு எதிராகப் பல புகார்கள் எழவும் நிறைய ஸ்கோப் இருக்கிறது. அங்கே ஒரு பக்கம் 90's கிட்ஸ் சேலஞ்ச் போட்டு ஒரு சமூகம் விளையாடிக்கொண்டிருக்க, இந்தப் பக்கம் 90 ml பாட்டிலை உள்ளே வீசியெறிந்து டிரெண்டிங் ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறது இந்த டீம்.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon