மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

வயதானவருடன் திருமணம்: வாட்ஸ்அப்பில் வதந்தி!

வயதானவருடன் திருமணம்: வாட்ஸ்அப்பில் வதந்தி!

பணத்துக்காக வயது முதிர்ந்த பெண்ணைத் திருமணம் செய்த இளைஞர் என்று வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தியால் கொதித்துப்போன தம்பதிகள், சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்திலுள்ள செருபுழாவைச் சேர்ந்தவர் அனூப் செபாஸ்டியன். இவர் சண்டிகரில் பணியாற்றி வருகிறார். சார்ஜாவில் பணியாற்றும் செம்பந்தொட்டியைச் சேர்ந்த ஜூபி ஜோசப் என்ற பெண்ணுக்கும் இவருக்கும், கடந்த 4ஆம் தேதியன்று திருமணம் நடைபெற்றது. இது குறித்த விளம்பரங்கள் மலையாளத் தினசரிகளிலும் வெளியானது. இந்த நிலையில், தங்களைக் குறித்து வாட்ஸ்அப்பில் வெளியான வதந்தியால் இந்த தம்பதிகள் நொந்துபோய் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

அப்படி என்ன நடந்தது? “பெண்ணின் வயது 48. மணமகனின் வயது 25. பெண்ணின் சொத்துகள் 25 கோடி வரை இருக்கும். வரதட்சணையாக 101 சவரன் நகைகளும் 50 லட்சம் ரூபாயும் அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் வரதட்சணை தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியொரு வயதான பெண்ணுடன் இளம் ஆணுக்கு செருபுழாவில் திருமணம் நடந்துள்ளது பணத்துக்காக..” என்று வாட்ஸ்அப்பில் ஒரு தகவல் வேகமாகப் பரவியது. ஜூபி மற்றும் அனூப்பின் புகைப்படங்களும் அதில் இணைக்கப்பட்டிருந்தன. என்னவென்று தெரியாமல் மக்களும் அதனை வேகமாகப் பகிர, இப்போது சம்பந்தப்பட்ட தம்பதியினர் மனமுடைந்துள்ளனர்.

ஜூபியின் வயது 27 என்பதும், அனூப்பின் வயது 29 என்பதும் இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.

சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய எந்த உண்மையையும் அறியாமல், வெறும் தோற்றத்தின் அடிப்படையில் இந்த வதந்தியைக் கட்டமைத்துள்ளனர். இதனைப் பரப்பியவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது ஜூபி – அனூப்பின் விருப்பம். இது குறித்துப் பேசிய கண்ணூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், இத்தகவலை பார்வர்ட் செய்தவர்கள் மூலமாக இதனை முதலில் அனுப்பிய நபரைக் கண்டறியும் பணி நடந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon