மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

தம்பிதுரைக்கு கருத்துவேறுபாடு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

தம்பிதுரைக்கு கருத்துவேறுபாடு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

கூட்டணி தொடர்பாக பாஜகவை தம்பிதுரை விமர்சித்து வரும் நிலையில், “தம்பிதுரைக்கு எந்தவிதமான கருத்துவேறுபாடும் இல்லை” என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிட அதிமுக-பாஜக இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாக தகவல் வெளியாகிவரும் நிலையில், பாஜக கூட்டணிக்கு தம்பிதுரை வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்துவருகிறார். மணப்பாறையில் இன்று (பிப்ரவரி 9) செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, பாஜகவுடன் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை வளர விடமாட்டோம் என்று பாஜக தலைவர்கள் கூறும்போது தேசியக் கட்சி என்று சொல்லிக்கொள்ளும் இவர்களை எவ்வாறு நாங்கள் வரவிடுவோம் என்று கேள்வியும் எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் கன்னியாகுமரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதித் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம், அதிமுக-பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக தம்பிதுரைதான் இருந்துவருகிறார் என்று கூறப்படுகிறதே என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “நானும் அண்ணன் தம்பிதுரையும் ஏறக்குறைய இரண்டு மணி நேரங்கள் பல விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளோம். தம்பிதுரைக்கு எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. அதிமுகவுக்கென உள்ள கொள்கையின் அடிப்படையில் தம்பிதுரை பேசிவருகிறார். தமிழகத்திற்கு சில விஷயங்கள் நடக்க வேண்டுமென ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு மாதிரி யோசிப்பார்கள். அந்த யோசனை மற்றொரு கட்சிக்கு இருக்கக் கூடாது என்று நாம் சொல்ல முடியாது” என்று தெரிவித்தார்.

மேலும், “பொதுவான கருத்துக்கள் கூறும்போது தம்பிதுரைக்கு என்னுடைய கருத்தில் வேறுபாடு இருக்கும், அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடு இருக்கும். இதனை நாங்கள் பேசித் தீர்த்துக்கொள்வோம்.தமிழகத்தில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி 40 இடங்களிலும் வெற்றிபெறும்” என்றும் தெரிவித்திருக்கிறார்.

பட்ஜெட் தொடர்பாக கருத்து தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன், விவசாயிகளுக்கான திட்டங்கள், கஜா புயலால் வீடிழந்தவர்களுக்கு வீடு கட்டித் தருவது உள்ளிட்ட பல விஷயங்கள் வரவேற்கப்படக்கூடியதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon