மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

மோடியை எதிர்த்து பிரியங்கா: 60% பேர் விருப்பம்!

மோடியை எதிர்த்து பிரியங்கா: 60%  பேர் விருப்பம்!

பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசியில் பிரியங்கா காந்தியை நிறுத்த வேண்டும் என கருத்து கணிப்பில் 60 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது சகோதரியான பிரியங்கா காந்தியை கிழக்கு உபி பொதுச் செயலாளராக நியமித்தார். தற்போது நேரடி அரசியலுக்குப் பிரியங்கா காந்தி வந்துள்ளதையடுத்து, பிரதமர் மோடிக்கு எதிராக அவரது தொகுதியான வாரணாசியில் பிரியங்காவை களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் வலுத்து வருகிறது.

இந்நிலையில் ஏபிபி செய்தி - சி வோட்டர் இணைந்து உபியில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில், வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராகப் பிரியங்கா காந்தியை போட்டி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என 60 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். 32 சதவிகிதம் பேர் தேவையில்லை என்றும் 8 சதவிகிதம் பேர் தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.

பிரியங்காவின் அரசியல் நகர்வு என்பது நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்குப் பயனளிக்கும் என்று 50 சதவிகிதத்தினரும், உபியில் மட்டுமே அதிக வாக்குகள் கிடைக்கும் என்று 18 சதவிகிதம் பேரும், அரசியல் களத்தில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று 24 சதவிகிதம் பேரும் கூறியதாகக் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

பிரியங்கா, இந்திரா காந்தி போல் செயல்படுகிறாரா என்று கேள்விக்கு, பெரும்பாலானவர்கள் ஆம் என்று பதில் அளித்துள்ளனர். இந்திரா காந்தி போன்றே பிரியங்காவின் செயல்பாடுகள் இருப்பதாக 44 சதவிகித பேரும், இல்லை என்று 42 சதவிகிதம் பேரும், கருத்து தெரிவிக்கவில்லை என 13 சதவிகித பேரும் கூறியுள்ளனர்.

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் தோல்வி அடைந்ததாக 50 சதவிகிதத்தினர் கருதுகின்றனர், இதன் காரணமாகவே பிரியங்கா ஒரு பெரிய பாத்திரமாக மாறியுள்ளார் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கருத்துக்கணிப்பு ஜனவரி இறுதி வாரம் நடத்தப்பட்டுள்ளது.

சனி, 9 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon