மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 10 பிப் 2019

ஒரு கப் காபி!

ஒரு கப் காபி!

முரண்டுபிடித்தலும் அழகு!

இந்திய சினிமாவின் முகமாக உலக அரங்கில் பார்க்கப்பட்ட முதல் படம் பதேர் பாஞ்சாலி. சத்யஜித் ரே இயக்கிய முதல் திரைப்படமான அது வெளியாகி 65 ஆண்டுகளை நெருங்குகிறது. இன்றளவும் உலகளவில் சிறந்த நூறு திரைப்படங்களின் பட்டியலை யார் தயாரித்தாலும் இந்தியாவில் இருந்து பதேர் பாஞ்சாலி கட்டாயம் இடம்பெறும்.

பிரமாண்ட பட்ஜெட், திறமைவாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் கூட்டம், அனுபவமிக்க நடிகர்கள் என இன்று உருவாகும் படங்களும் பதேர் பாஞ்சாலியின்முன் நிற்க முடிவதில்லை. ஆனால், ரே படம் எடுக்கும்போது அவரிடம் ஒரு கேமாரவும் அதை இயக்க ஒரு நண்பரும் மட்டுமே இருந்தார். ஆனால், தனக்கு வேண்டியது என்ன என்பதில் அவர் தெளிவாக இருந்தார். எவ்வளவு கஷ்டப்பட்டும் அதை வரவழைப்பது, அதற்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருப்பது ஆகியவற்றில் உறுதியாக இருந்தார்.

ரயிலைப் பார்ப்பதற்காக சிறுமி துர்காவும் அவளது தம்பி அப்புவும் நாணல் நிரம்பிய வெளியில் ஓடிச் செல்வார்கள். தூரத்தில் ரயில் புகையைக் கக்கியபடி சென்றுகொண்டிருக்கும். இந்தக் காட்சி இப்படி தான் வர வேண்டும் எனப் படம் வரைந்து தனது ஒளிப்பதிவாளரிடம் விளக்கிவிட்டார் ரே. அவர் எதிர்பார்த்தபடியே ஆள் உயரம் வளர்ந்துள்ள நாணல் காடும், ரயில் பாதையும் உள்ள இடத்தைத் தேடிக் கண்டுபிடித்தனர். மறுநாள் படப்பிடிப்பு எனத் தீர்மானிக்கப்பட்டது. நடிக்கும் இரு குழந்தைகள், இயக்குநர், ஒளிப்பதிவாளர், சில நண்பர்கள் அவ்வளவு தான் படக்குழு.

தேர்வு செய்த இடத்துக்கு வந்த படக்குழுவுக்கு அதிர்ச்சி. அத்தனை நாணல் புற்களையும் அந்தப் பகுதி விவசாயிகள் அறுத்துச் சென்றுவிட்டனர். அவர்களின் மேல் தவறேதுமில்லை. அது அவர்கள் பணி. ரேவை படக்குழுவினர் சமாதானப்படுத்தினர். நாணல் இல்லாவிட்டால் என்ன அதோ தூரத்தில் ரயில் பாதை இருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் ரயில் வந்துவிடும். குழந்தைகளை ஓடச் சொன்னால் காட்சியைப் படமாக்கிவிடலாம் என்கிறார்கள். ரே படப்பிடிப்பை ரத்து செய்கிறார். நாணல் வளரட்டும் அதன் பின் இந்தக் காட்சியை படமாக்கலாம் என்று கூறுகிறார்.

படக்குழுவுக்கு இப்போது தான் பேரதிர்ச்சி. விடுமுறை நாள்களில் பணம் கிடைத்தால் மட்டுமே படப்பிடிப்பு நடைபெறுகிறது. கேமரா வாடகையில் இருந்து இன்றே பெரும் பணம் செலவாகியுள்ளது. இதில் படப்பிடிப்பை ரத்து செய்தால் என்ன ஆகும்! ரே தனது நிலைப்பாட்டில் உறுதியாய் இருந்தார். படத்தில் நாம் பார்க்கும் காட்சி பல மாதங்களுக்குப் பின் மீண்டும் சென்று படமாக்கியது. படத்தில் அழகியலுக்காகப் பேசப்பட்ட பல காட்சிகளில் இதுவும் ஒன்று.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

ஞாயிறு 10 பிப் 2019