மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 10 பிப் 2019

டுலெட் : உலக சினிமாவுக்கு வடம் பிடிக்கும் ரசிகர்கள்!

டுலெட் : உலக சினிமாவுக்கு வடம் பிடிக்கும் ரசிகர்கள்!

மதரா

டிஜிட்டல் தொழில்நுட்பம் சினிமா தயாரிப்பை மிகவும் எளிமையாக்கியுள்ளது. குறைந்த முதலீட்டில் நண்பர்கள் சிலர் ஒன்றுகூடி ஒரு திரைப்படத்தை உருவாக்கிவிட முடியும். ஆனால், இப்போதுள்ள சூழ்நிலையில் படத்தை வெளியிடுவது மிகவும் சிரமமானதாக மாறியுள்ளது. அதைவிட மக்களிடையே கொண்டுசேர்ப்பது மிகக் கடினமானதாக உள்ளது. படத் தயாரிப்புக்கு செலவிட்ட தொகையைவிடக் கூடுதலாக விளம்பரங்களுக்குச் செலவிட்டால்தான் படம் மக்களைச் சென்றடைந்து அவர்களைத் திரையரங்குக்கு அழைத்து வரும் நிலை உருவாகியுள்ளது. தமிழ் சினிமாவின் தற்போதைய இந்த நிலையை மாற்றிக்காட்டியுள்ளது செழியன் இயக்கத்தில் உருவாகியுள்ள டுலெட் திரைப்படம்.

நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு 30க்கும் மேற்பட்ட விருதுகளைக் குவித்துள்ளது டுலெட் . செழியன் முதன்முறையாக இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு அவரே ஒளிப்பதிவு செய்து தனது ‘ழ’ சினிமாஸ் மூலம் தயாரித்துள்ளார்.

ஓராண்டுக்கும் மேலாகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வந்த டுலெட் திரைப்படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகிக்கொண்டே இருந்தன. உலக சினிமாவின் இன்றைய முகங்களாக இருக்கும் இயக்குநர்கள் எல்லாம் டுலெட் தரமான படைப்பு எனச் சான்றிதழ் வழங்கிக் கொண்டிருந்தார்கள். தமிழில் தரமான படங்கள் வராதா என ஏங்கிக்கொண்டிருந்த தமிழ் திரைப்பட ரசிகர்கள் சமீபகாலமாக நல்ல படங்களை வரவேற்று கொண்டாடத் தொடங்கியுள்ளனர். டுலெட் தொடர்பாக வெளியான செய்திகள் அவர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிப்ரவரி 21ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்ற அறிவிப்பும், அதைத் தொடர்ந்து வெளியான ட்ரெய்லரும் பார்வையாளர்களைக் கொண்டாட்ட மனநிலைக்குத் தள்ளியது.

அதன் விளைவாகப் படம் தொடர்பான ஃபேஸ்புக் பதிவுகள், ட்விட்டர் பதிவுகள் வரத் தொடங்கின. மதியழகன் சுப்பையா என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் படத்துக்காக நான் போஸ்டர் வடிவமைத்து ஒட்டப்போகிறேன். விருப்பமானவர்கள் என்னுடன் இணைந்துகொள்ளலாம் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். போஸ்டர் தயார் செய்வதற்கான பேப்பர், ஸ்கெட்ச், வண்ணங்கள் உள்ளிட்டவற்றை அவரே ஏற்பாடும் செய்தார். இதனால் பலரும் அவரது வீட்டில் ஒன்றுகூடி போஸ்டர்களைத் தயார் செய்து நகரில் ஒட்டத்தொடங்கினர். சமூக வலைதளங்களிலும் பகிர்ந்தனர்.

இது மேலும் பலருக்கு ஊக்கமாக அமைந்தது. விளைவு ஒவ்வோர் ஊரிலிருந்தும் பலரும் கரம்கோக்கத் தொடங்கினர். இலங்கை, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் என வெளிநாடுகளில் இருந்தும் பலரும் போஸ்டர்களை வடிவமைத்து காட்சிக்கு வைத்ததோடு இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் எனப் பலதரப்பினரும் தங்களது கற்பனை வளத்தை போஸ்டரில் காட்டத்தொடங்கியுள்ளனர். வரையத் தெரியாதவர்கள், போஸ்டரை வடிவமைக்க முடியாதவர்கள் தங்களது பகுதிகளில் அங்கங்கே வீட்டு உரிமையாளர்களால், தரகர்களால் வைக்கப்பட்டிருக்கும் டுலெட் போர்டுகளை புகைப்படம் எடுத்துப் பதிவிட்டு வருகின்றனர்.

கதாநாயகர்களுக்குப் பிரமாண்ட உயரத்தில் கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள், முகம் தெரியாத கதாநாயகன், பெரிய பின்புலம் இல்லாத இயக்குநர் உருவாக்கியுள்ள படத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுப்பது ஆச்சரியகரமாகவும் வரவேற்கக் கூடியதாகவும் இருக்கிறது. படம் விருதுகள் குவித்தது ஒருபுறம் இருந்தாலும் படம் பேசும் கருப்பொருளும் அது உருவாக்கப்பட்ட விதமும் இந்த வரவேற்புக்குக் காரணமாக இருக்கிறது.

வாடகை வீட்டில் வசிப்போர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அனுபவிக்காமல் உணரமுடியாது. அதிக கட்டணம், இட நெருக்கடி, வீடு தேடி அலைவது எனப் பல சம்பவங்களை ட்ரெய்லரில் காட்சிப்படுத்தியிருந்தனர். யதார்த்தமான அழுத்தமான அந்தக் காட்சிகள் பார்வையாளர்களைப் படம் வெற்றியாக வேண்டும் என்ற உறுதியை எடுக்க வைத்துள்ளது. அதன் விளைவாகவே புரொமோஷன் வேலைகளில் ஒவ்வொருவரும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்தபின் இயக்குநராகச் செழியன் என்ன நினைக்கிறார் என்பதை அறிய அவரைத் தொடர்புகொண்டோம். “உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இவை எல்லாம் எப்படி நடக்கிறது என்று தெரியவில்லை. மக்கள் இந்தப் படத்தை தங்கள் படமாக பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இதில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர். இந்த அறிவிப்பை முதலில் வெளியிட்ட மதியழகன் சுப்பையாவுக்கும் எனக்கும் எந்த அறிமுகமும் இல்லை. அவர் தொடங்கி வைத்தது இன்று உலகம் முழுக்க பரவியுள்ளது. அவர் முகநூலில்கூட என் நண்பர் பட்டியலில் இல்லை. அவரைத் தொடர்பு கொண்டு அவர் இருப்பிடத்திற்கே சென்று பேசினேன். எதனால் இந்த முன்னெடுப்பைத் தொடங்கினீர்கள் என்று கேட்டேன். உங்களுடைய ஒவ்வொரு புத்தகங்களையும் நான் வாசித்துள்ளேன். நல்ல சினிமா வர வேண்டும் என்ற உங்கள் ஆவல் எழுத்தில் வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. உங்களது படத்திலும் அது வெளிப்பட்டுள்ளதை உலக சினிமா இயக்குநர்களே வாக்குமூலம் அளித்துள்ளனர். நாங்களும் ட்ரெய்லரைப் பார்த்தோம். இந்தப் படம் வெளியாகி பெருவாரியான மக்களைச் சென்றடைய வேண்டும். அது இதுபோன்ற படங்கள் வருவதற்கான பெரிய வழியைத் திறந்துவிடும் என்றார். இந்த வரவேற்பு நான் முற்றிலும் எதிர்பார்க்காதது” என்று செழியன் கூறினார்.

மேலும் அவர், ரசிகர்களின் இன்னபிற முன்னெடுப்புகளையும் கூறினார். “நாளுக்கு நாள் இந்த புரமோஷன் பணிகள் அதிகமாகிக் கொண்டே உள்ளது. இரண்டு பேர் படத்தைப் பற்றி நாடகமாக நடித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். சிலர் வீடு வீடாகச் சென்று மக்களைத் திரையரங்கில் சென்று பார்க்கச் சொல்லி பிரச்சாரம் செய்வதாக சொல்கிறார்கள். பைக்கில் பேரணி சென்று விளம்பரப்படுத்தவும் ஒரு குழுவினர் தயாராகியுள்ளனர். கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களிடம் படம் பற்றிப் பேசுகிறார்கள். மொத்தமாக முன்பதிவு செய்து படம் பார்க்க திட்டமிட்டுள்ளனர்” என்று ரசிகர்களின் முன்னெடுப்பு விரிந்துகொண்டே செல்வதை செழியன் விவரித்தார்.

“குறைந்த பட்ஜெட்டில் மிகச் சிறிய குழுவால் உருவாக்கப்பட்ட இந்தப் படம் உலகம் முழுவதும் விருதுகள் பெற்று பொருளாதார ரீதியாகவும் வெற்றிபெற்றுவிட்டது. இருப்பினும் இது போன்ற படங்கள் திரையரங்கில் வெளியாக வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். ஏனென்றால் தரமான படத்தை உருவாக்கலாம், விருதுகள் வாங்கலாம். ஆனால், திரையரங்கில் ஓட்ட முடியாது, மக்கள் படம் பார்க்க வரமாட்டார்கள் என்று இங்கு ஒரு விஷமத்தனமான கருத்து விதைக்கப்பட்டுள்ளது. அதை மாற்றிக்காட்டவே திரையரங்கு வெளியீட்டில் உறுதியாக இருந்தேன். இப்போது கிடைத்துள்ள இந்த ஆதரவு எனக்கு பெரும் நம்பிக்கையளித்துள்ளது. வெளியீட்டில் சத்யம் சினிமாஸ் எங்களுடன் கைகோத்துள்ளது” என்றார்.

படம் வெளியாகி நேர்மறையான விமர்சனங்கள் வரத்தொடங்கும்போது திரையரங்கைவிட்டு எடுக்கப்பட்ட பல படங்கள் சமீபத்திய உதாரணங்களாக இருக்கின்றன. அந்தவகையில் வெளியாவதற்கு முன்னரே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள டுலெட் தனித்து நிற்கிறது. மக்களிடம் பணம் பெற்று படம் தயாரிப்பது மக்கள் சினிமா என்றால் மக்கள் தங்கள் தோள்மேல் வைத்து, கொண்டு சேர்க்கும் இந்தப் படமும் மக்கள் சினிமா தானே!

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

ஞாயிறு 10 பிப் 2019