மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 10 பிப் 2019

குடிபெயர்ந்தவர்களால் வாக்களிக்க முடியுமா?

குடிபெயர்ந்தவர்களால் வாக்களிக்க முடியுமா?

இந்தியாவில் நகரப்புறத்துக்குக் குடிபெயர்ந்தவர்களில் 91 சதவிகிதம் பேர் தாங்கள் வாழும் பகுதியில் வாக்களிக்க முடியவில்லை என்று தெரிவித்ததாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

வாடகை வீட்டுக்கான வசதியை அளிக்கும் நெஸ்ட்வே என்ற அமைப்பு, சொந்த ஊரை விட்டு வெளியூர்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில், டெல்லி, மும்பை, புனே, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்துக்குக் குடிபெயர்ந்த 1,100 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இவர்கள் அனைவரும் இருபது வயதுகளில் இருப்பவர்கள், நகரங்களில் ஏதேனும் ஒரு வேலை செய்து வருபவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதில் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

அவர்கள் தங்களது சொந்த மாநிலத்தில் வசிக்காதபோது, இந்தப் பிரச்சினையானது மேலும் கடினமானதாக உள்ளது. அதிகாரிகள் புதிய வாக்காளர்களுக்கு உதவுவது அதிகரித்தாலும், கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை மொழி பெரிய தடையாக இருக்கிறது என நெஸ்ட்வேயின் இணை நிறுவனர் அமேந்திரா சஹு கூறியுள்ளார்.

“நகர்ப்புறத்துக்குக் குடிபெயர்ந்த 75 சதவிகிதம் பேருக்குத் தாங்கள் வாழும் பகுதியில் எப்படி வாக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. புதிதாக வேறு இடத்துக்குச் சென்றால், நம்மால் வாக்களிக்க முடியாது என 60 சதவிகிதம் பேர் நினைக்கின்றனர். 40 சதவிகிதம் பேர் மட்டுமே வாக்குப் பதிவைத் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு மாற்ற முடியும் என்பதைத் தெரிந்து வைத்திருந்தனர். ஒரு சிலர் வாக்காளர் அடையாள அட்டை இருப்பதால், எங்கு இருந்து வேண்டுமானாலும் வாக்கு அளிக்கலாம் என நினைக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார் சஹு.

இதில் முக்கியப் பிரச்சினை என்னவென்றால், சிலருக்கு எப்படி வாக்கைப் பதிவு செய்ய வேண்டும் என்பது தெரியவில்லை. டெல்லி, மும்பை, புனே போன்ற இடங்களுக்குக் குடிபெயர்ந்தவர்களைக் காட்டிலும் பெங்களூருவுக்குக் குடிபெயர்ந்தவர்கள் வாக்காளர் அடையாள அட்டையைப் பெறுவது குறித்து விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். பெங்களூரில் 53 சதவிகிதம் பேரும், டெல்லியில் 47 சதவிகிதம் பேரும், மும்பை மற்றும் புனேயில் 52 சதவிகிதம் பேரும் செல்லும்படியான வாக்காளர் அடையாள அட்டையை வைத்திருக்கின்றனர்.

வாக்காளராகப் பதிவு செய்யும் முறை குறித்த விழிப்புணர்வு பெங்களூரில் 20 சதவிகிதம் பேருக்கும், மும்பையில் 27 சதவிகிதம் பேருக்கும், டெல்லியில் 29 சதவிகிதம் பேருக்கும் இருக்கிறது.

பெங்களூருவுக்கு இடம்பெயர்ந்த 77 சதவிகிதம் பேர் தாங்கள் வரும் தேர்தலில் வாக்களிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை டெல்லியில் 69 சதவிகிதமாகவும், மும்பையில் 70 சதவிகிதமாகவும் உள்ளது. இந்த ஆய்வில் பங்களித்தவர்களில் 34 சதவிகிதம் பேர் 18-25 வயதுடையவர்கள். 44 சதவிகிதம் பேர் 25-40 வயதுடையவர்கள். 14 சதவிகிதம் பேர் 30-35 மற்றும் 8 சதவிகிதம் பேர் 35 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 80.5 சதவிகிதம் பேர் ஆண்கள், 19 சதவிகிதம் பேர் பெண்கள். 0.5 சதவிகிதம் பேர் திருநங்கைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 10 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon