மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 20 அக் 2020

கரன்ஸி விளையாட்டு: சிக்கவைக்கப்படும் தயாரிப்பாளர்கள்!

கரன்ஸி விளையாட்டு: சிக்கவைக்கப்படும் தயாரிப்பாளர்கள்!

தமிழ் சினிமா 365: பகுதி - 39

இராமானுஜம்

இந்தியாவில் பெருமளவு முதலீடு செய்யப்படும் இந்தித் திரையுலகில் ஒரு படம் வெளியீட்டுக்கு தயராகி அப்படத்தின் உரிமைகள் விற்பனை செய்யப்படுகிற போது அது சம்பந்தமான விளம்பரங்கள் சினிமா வணிக பத்திரிகைகளில் வெளியிடப்படும். 15 நாட்களுக்குள் அப்படம் சம்பந்தமான பைனான்ஸ், மற்றும் வேறு பிரச்சினைகள் இருப்பின் தயாரிப்பாளரை நேரடியாக தொடர்பு கொண்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் நடைமுறை அங்குள்ளது. முடியாத பட்சத்தில் நீதிமன்ற உதவியை நாடுவார்கள் வேறு எந்த வகையிலும் திரைப்படத்தை வெளியிடுவதை தடுக்கவோ இடையூறு செய்யவோ முடியாது.

தெலுங்கு திரையுலகில் தயாரிப்பாளர்கள் சங்கத்தை கடந்து வியாபாரம், விளம்பரம், பைனான்ஸ் பிரச்சினைகளை காரணம் காட்டி தடுக்கவோ, வெளியீட்டில் பிரச்சினை செய்யவோ முடியாது. தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் - திரையரங்கு உரிமையாளர்களிடையே பரஸ்பர நட்புணர்வும், புரிந்துணர்வும் உள்ளது. இதனால் அங்கு மூன்றாம் நபர் தலையீட்டுக்கு இடமில்லை.

ஆனால் தமிழ் சினிமாவில் மட்டுமே படம் ரிலீஸுக்கு சில தினங்களுக்கு முன் பிரச்சினைகள் தொடங்கப்பட்டு தொந்தரவுகளை கொடுக்கின்றனர். இன்று வரை இதனை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் ஒன்றுபட்டு செயல்படவில்லை. அதனால்தான் சம்பந்தபட்ட படங்களில் முதலீடு செய்யாத நபர்கள் கூட சங்கங்களின் பெயரால் பஞ்சாயத்து செய்ய முடிகிறது. இதனைத் தட்டிக் கேட்கவும், தயாரிப்பாளர்களை பாதுகாக்க வேண்டிய தயாரிப்பாளர்கள் சங்கம் ஒன்றுபட்டு இல்லாமல் தலைமைப் பொறுப்புக்கு வருபவர்களை எதிர்த்து போட்டியிட்டவர்கள் பரஸ்பர குற்றசாட்டை சுமத்தி, சங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட இயலாமல் எதிர்தரப்பினர் குற்றச்சாட்டை சமாளிக்கும் வேலையை செய்து இரண்டு வருட பதவிக் காலத்தை முடித்து வெளியேற வேண்டிய அவலம் தொடர்கதையாக உள்ளது.

அதனால் தான் தமிழ் சினிமாவில் அதிகாரம் மிக்க அமைப்பாக, தீர்மானிக்கும் சக்தியாக இருக்க வேண்டிய தயாரிப்பாளர்கள் சங்கம் பலமிழந்து விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் விருப்பத்திற்கேற்ப தயாரிப்பாளர்கள் பகடைகாயாக மாற வேண்டியுள்ளது.

விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பை விமர்சிக்கும் போது தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் திட்டமிட்டு காரியமாற்றாத போக்கும், ஒரு படத்தின் வரவு செலவு கணக்கை அப்படத்துடன் முடித்துவிட்டு அடுத்த படத்தை புதிய கணக்குடன் தொடங்கினால் சம்பந்தமில்லாத நபர்கள் சங்கம் மூலம் நாட்டாமைத் தனம் செய்ய வேண்டிய நிலை இங்கு ஏற்பட்டிருக்காது என்பதை கூறாமல் இருக்க முடியாது. அப்படி ஒரு நடைமுறையை தயாரிப்பாளர் கடைபிடிக்காததன் விளைவு படம் வியாபாரம் செய்யப்பட்டு, ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பின் புற்றீசல் போல கிளம்பிய பிரச்சினை, அதனை கிளியர் செய்ய போதுமான நிதி பலம் இல்லாத தயாரிப்பாளர், விநியோகஸ்தர் முன் இரண்டு வகையான ஆலோசனைகளை கூட்டமைப்பின் உற்சவ மூர்த்தி முன்வைப்பார்.

ஒன்று படத்தை வியாபாரம் செய்திருந்தாலும் குறிப்பிட்ட ஏரியாக்களை பஞ்சாயத்து செய்பவர்கள் வசம் கொடுத்து விட்டால் படம் எந்த தடையும் இன்றி ரிலீஸாகிவிடும்.

இரண்டு சம்பந்தபட்ட படத்தில் நடித்துள்ள கதாநாயகன் சம்பளத்தில் முடிந்த வரைவசூல் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்படும், அதுவும் முடியாதபோது படம் ரிலீஸாவது கேள்விக்குறியாக மாறுகிற சூழல் ஏற்படுத்தப்படும்.

தயாரிப்பாளர் வேறு வழி இன்றி உற்சவ மூர்த்தி சொன்னபடி ஏரியா உரிமை அவுட்ரேட் முறையில் விற்கப்பட்டிருந்தாலும் அது விநியோக ஒப்பந்தமாக மாற்றப்பட்டு தயாரிப்பாளர் கொடுக்க வேண்டிய பாக்கி செட்டில் செய்யப்பட்டு சொன்ன தேதியில் படம் ரிலீஸ் ஆகும்.

விநியோக முறையில் படம் ரிலீஸ் செய்யப்பட்டு கிடைக்கும் வசூலில் குறைந்த பட்சம் 10% கமிஷன், தயாரிப்பாளர் கொடுக்க வேண்டிய பாக்கி, ஏரியா விநியோக உரிமை விலைக்குள் சரியாகிவிட்டால் தயாரிப்பாளருக்கு வட்டி சுமை ஏற்படாது. இல்லையென்றால் கூடுதல் தொகைக்கு சினிமா வட்டி, படம் ஓடவில்லை என்றால் எஞ்சிய தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டிய சுமையும் தயாரிப்பாளருக்கு, இதனை ஏற்பாடு செய்த உற்சவ மூர்த்தியை கரன்சிகளால் கவனிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படும். இப்படித்தான் இங்கு பலர் சங்க அதிகாரத்தை பயன்படுத்தி முதலீடே இல்லாமல் பெரிய படங்களை கையகப்படுத்தி விநியோகஸ்தர்களாக தமிழ் சினிமாவில் வலம் வருகின்றனர்.

தொடரின் நேற்றையை கட்டுரையை படித்து விட்டு சில தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் நம்மிடம் பேசுகிற போது தென்னிந்திய சினிமா பைனான்சியர்கள் சங்கம் உருவாக மூலகாரணம் திருப்பூர் சுப்பிரமணி என்றனர்.

ஏன் எதற்கு நாளை பகல் 1 மணிக்கு..

குறிப்பு : இத் தொடர் சம்பந்தமாக தங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்

ஆசிரியர் குறிப்பு

இராமானுஜம் : கடந்த இருபது ஆண்டுகளாக தமிழ் சினிமா தயாரிப்பு, வியாபாரம், வசூல் விவரங்களை வெளியிட்டு வந்த வணிகப் பத்திரிகையான ‘தமிழ்நாடு எண்டர்டெயின்மென்ட்’ மாத இதழின் பொறுப்பாசிரியராக பணியாற்றியவர்.

முந்தைய கட்டுரை - சதி வலையில் கட்டப்பட்டுள்ள தமிழ் சினிமா!

செவ்வாய், 12 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon