மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 பிப் 2019

தமிழ் அடையாளங்கள் பராமரிப்பு: நீதிமன்றம் வேதனை!

தமிழ் அடையாளங்கள் பராமரிப்பு: நீதிமன்றம் வேதனை!

தமிழ் மொழியின் பழமைக்குச் சான்றாக விளங்குகின்ற அடையாளங்களைத் தமிழக அரசு பராமரிக்கத் தவறியது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

மதுரையைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கொன்றைத் தொடர்ந்தார். மதுரையில் உள்ள சமணர் அடையாளங்களைப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டுமென்று தனது மனுவில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். சமணர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழியின் பாரம்பரியத்தை வளர்த்தவர்கள் என்றும், இதுபற்றி வளையாபதி, சிலப்பதிகாரம் நூல்களில் சான்றுகள் உள்ளன என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். தமிழகத்தில் 450க்கும் அதிகமான சமணர் அடையாளங்கள் உள்ளன என்றும், ஆனால் அந்த பகுதிகளில் உள்ள குவாரிகள் செயல்பாடுகளினால், அவை சிதைக்கப்பட்டு வருவதாகவும் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறும் அவரது மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று (பிப்ரவரி 15) நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரையில் உள்ள சமணர் அடையாளங்கள் அனைத்தையும் ஏன் பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். “பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்படாமல் இருக்கும் வரலாற்று சான்று உள்ள பகுதிகள் எத்தனை, அவைகளைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?” என்று கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இது பற்றி,மத்திய மாநில தொல்லியல் துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டனர். இதையடுத்து, இந்த வழக்கு வரும் மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சனி, 16 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon