மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 பிப் 2019

ராணுவ வீரர்கள் உடலுக்கு மோடி, ராகுல் அஞ்சலி!

ராணுவ வீரர்கள் உடலுக்கு மோடி, ராகுல் அஞ்சலி!

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 40 பேரின் உடல்களுக்குப் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்த வாகனம் மீது நேற்று முன்தினம் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்ற மிகப் பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது. தமிழகம், கர்நாடகா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் என நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் காஷ்மீருக்கு சென்ற வீரர்கள் உயிரிழந்திருப்பது ஒட்டு மொத்த இந்திய மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

நாடு முழுவதும், அனைத்து மாநிலங்களிலும் உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அருணாசல பிரதேசத்தில் பாகிஸ்தான் கொடி எரிக்கப்பட்டுள்ளது. திரிபுரா முதல்வர் தலைமையில் அகர்தலாவில் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடைபெற்றது.

இந்நிலையில் புல்வாமாவில் இருந்து 40 வீரர்களின் உடல்களும் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படுவதற்காகத் தனி விமானம் மூலம் நேற்று இரவு 8 மணியளவில் டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டன. 40 பேரின் உடல்களும் பாலம் விமான நிலையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன.

பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அவர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படுகின்றன.

வீரர்களின் இறுதி ஊர்வலத்தில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று மோடி கூறியிருக்கிறார். அந்தவகையில் நிர்மலா சீதாராமன் இன்று திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய இரு மாநிலங்களிலும் உயிரிழந்த வீரர்களின் இறுதி மரியாதையில் கலந்துகொள்ளவுள்ளார்.

சனி, 16 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon