மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 பிப் 2019

இளைய நிலா: பிறரது சிக்கல்களால் உங்களுக்கு மன உளைச்சலா?

இளைய நிலா: பிறரது சிக்கல்களால் உங்களுக்கு மன உளைச்சலா?

இளைஞர்களின் உறவுச் சிக்கல்களைத் தீர்க்க என்ன வழி? பகுதி – 16

ஆசிஃபா

நம்முடைய மனநிலை நம்மைவிட நம்முடன் இருப்பவர்களையே அதிகமாக பாதிக்கும். 20களில் இருக்கும் நாம், நம் பெற்றோரைவிட நண்பர்களையே அதிகம் சார்ந்திருப்போம். என்ன உடை அணிவது என்பது முதல், வாழ்க்கையில் அடுத்து என்ன என்பதுவரை நண்பர்களின் ஆலோசனை இல்லாமல் நாம் எதையும் செய்வதில்லை. நம் மகிழ்ச்சியைப் பகிர்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், நாம் நம் கவலைகள், பிரச்சினைகள், சண்டைகள் என்று அவர்களிடம் கொட்டித் தீர்க்கிறோம். பேசிய பிறகு, நமக்கு நிம்மதியாக இருக்கிறது. அவர்களுக்கு எப்படி இருக்கும்?

மன உளைச்சலோ அல்லது ஏதேனும் உளவியல் சிக்கலோ இருக்கும் நபருக்கு நண்பராக இருப்பது, நம்முடைய பெரும்பகுதி ஆற்றலை எடுத்துக்கொள்ளும் விஷயம். அதாவது நாம் energy-drainக்கு ஆளாக்கப்படுவோம்.

இதை முதன்முதலில் நான் உணர்ந்தபோது, என்மீது எனக்கே கோபமாக வந்தது; குற்ற உணர்ச்சியாக இருந்தது. அது எப்படி இந்த மாதிரி எனக்குத் தோன்றுகிறது என்று என்னை நானே குற்றவாளியாக்கிக்கொண்டேன். இதுதான் பெரும்பாலானவர்களின் முதல் எதிர்வினையாக இருக்கும். ஆனால், நிதானமாக யோசித்து, விஷயம் தெரிந்தவர்களிடம் பேசினால் தெரியும், ஏறத்தாழ அனைவரும் இப்படி உணர்வார்கள் என்று.

ஆம், அனைவருக்குமே ஒரு எல்லை இருக்கிறது. அதுவரை நம்மால் பிறரின் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் கேட்டுப் புரிந்து நடந்துகொள்ள முடியும். ஆனால், அந்த எல்லையைத் தாண்டும்போது, சமாளிக்க முடிவது சிரமமாகிப்போகும். என் நண்பர்களில் குறிப்பாக ஒருவருடன் பேசும்போது எனக்கு இது நிகழ்ந்திருக்கிறது. என் மொத்த ஆற்றலையும் மோட்டார் வைத்து உறிஞ்சியதைப் போல நான் உணர்ந்திருக்கிறேன். அப்படி உணர்வது தவறு என்று நினைத்துக்கொண்டு, குற்றவுணர்ச்சியால் மேலும் ஆற்றலிழந்து போவேன். ஒரு வாரம் வரைக்கும்கூட இந்தச் சோர்வு தொடர்ந்திருக்கிறது.

நமக்குக் கற்பிக்கப்பட்ட மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று, empathy. பிறருக்காக யோசிப்பது; அவர்களின் சங்கடத்தில் தோள் கொடுப்பது, குறிப்பாக நண்பர்களுக்கு. இது 100% சரியான விஷயம். ஆனால், நம் மனவலிமையைப் பொறுத்துதான் இது தீர்மானிக்கப்பட வேண்டும். நம் மனநலனைக் கெடுத்துக்கொண்டு எப்படி இன்னொருவருக்குத் துணையாக நிற்க முடியும்? ஆறுதல் சொல்ல முடியும்? இப்படிச் சிந்திப்பதே தவறு என்ற கற்பிதத்தை உடைக்க வேண்டும்.

பிறரின் பிரச்சனைகளை மனதளவில் கொண்டு செல்லும்போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். நமக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை நினைவில் வைக்க வேண்டும். நண்பர்கள் வாழ்வில் மிக முக்கியம், அதைவிட முக்கியம் நாம்.

இந்தப் பிரச்சினையை எப்படிச் சமாளிப்பது? இந்தக் கேள்வியுடன் இருக்கும் பலரிடம் பேசியதிலிருந்து கிடைத்த சில ஆலோசனைகளைப் பகிர்கிறேன்.

நமக்கென்று சிறிது நேரம்: நமக்கான ஒரு நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை அல்லது ஒவ்வொரு நாளும் அல்லது நம் வசதிக்கேற்ப. நமக்குப் பிடித்த செயல்களை நாம் தனியாகச் செய்ய வேண்டும். புத்தகம் வாசிப்பது, படம் பார்ப்பது, பயணிப்பது என்று நமக்குப் பிடித்ததை முழு கவனத்துடன் செய்யும் போது, நம் மனம் de-compress ஆகிறது. இந்த decompression நம்மைவிட நம் நண்பர்களுக்கு உதவும். தெளிவாக அவர்களுடன் பேசி, உதவ முடியும்.

நிதானமும் திட்டமிடலும்: குறிப்பிட்ட நபரால் இப்படி energy-drain ஆகிறது எனும் பட்சத்தில், அவரை ஒதுக்கிவிடவே கூடாது. அது நம்மை அதிகமான குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கிச் சிக்கலை அதிகப்படுத்தும். மாறாக, அவர் நிதானமாக நல்ல மனநிலையில் இருக்கும்போது, பொறுமையாக எடுத்துச் சொல்லலாம். அப்படி அவர் புரிந்துகொள்ள மாட்டார் எனும் பட்சத்தில், அவருக்கென்று ஒரு நேரத்தை ஒதுக்க வேண்டும். அதுதவிர பிற நேரத்தை நமக்காக செலவிடலாம்.

வெளிப்படையான பேச்சு: சில நேரத்தில், நமக்கும் மன உளைச்சல், மன அழுத்தம் போன்ற சிக்கல்கள் இருக்கும். அப்படியானால், அதை நண்பர்களிடம் சொல்ல வேண்டும். எனக்கென்று ஒரு space வேண்டும் என்று சொல்வது தவறு கிடையாது.

முன் அனுமதி: நாம் யாரிடமாவது சென்று நம் பிரச்சினைகளைப் பேசப்போகிறோம் என்றாலோ, புலம்பப்போகிறோம் என்றாலோ, அவர்களிடம் ‘நான் பேசலாமா? உனக்கு பிரச்சனை இல்லையே?’ என்று கேட்கலாம். உணர்வுகளுக்கு வடிகால் தேடுவது நமக்கு எந்த அளவு நிம்மதியைத் தருமோ, அதே அளவு அந்த நபருக்கு ஆற்றல் குறைகிறது என்று அர்த்தம். எனவே, நாம் பேசுவதற்கு முன்பு அவரிடம் அதைக் கேட்கும் சக்தி இருக்கிறது என்று கேட்பது மிகவும் நல்ல விஷயம்.

தெளிவு: மிக மிக முக்கியமாக, நம் பிரச்சினைகளையும் பிறரின் பிரச்சினைகளையும் பிரித்துப் பார்க்கத் தெரிய வேண்டும். நாம் தெளிவான மனநிலையுடன் இருப்பதுதான், அவர்களுக்கு நல்ல ஆறுதலாக இருக்க மிகவும் தேவையான விஷயம்.

உரையாடுவது எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு பேசும் நபர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதும், பாதிப்படையாமல் இருப்பதும் முக்கியம்!

இந்தக் காதலுக்கு இணை உண்டா?

சனி, 16 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon