மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 பிப் 2019

திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு பட்டியல்!

திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு பட்டியல்!

இன்னும் சில வாரங்களில் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்கிற நிலையில், தமிழகத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் முடிந்து அறிவிக்கும் தருவாய்க்கு வந்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, மமக ஆகிய கட்சிகள் உறுதியாக உள்ள நிலையில், இதில் பாமகவும் இடம்பெறலாம் என்ற நிலையே சில நாட்களாக நிலவுகிறது.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி என்பதுதான் தற்போது அரசியல் அரங்கில் சூடாக விவாதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று சில நாட்களுக்கு முன் கூறிய திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீனையும் அண்ணா அறிவாலயத்துக்கு நேரில் அழைத்து ஆலோசனை நடத்தியிருந்தார். சந்திப்பில் திருச்சியில் போட்டியிடும் தனது விருப்பத்தையும், கட்சி அங்கீகாரம் உள்ளிட்ட விவகாரங்களைக் கூறி குறைந்தபட்சம் 2 இடங்களிலாவது மதிமுக போட்டியிட வேண்டும் என்பதை ஸ்டாலினிடம் வைகோ அழுத்தமாக கூறினாராம். காதர் மொய்தீன் எங்களுக்கு ஒரு தொகுதி வேண்டும், அது எது என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

இதுபோலவே காங்கிரஸ் 12 இடங்கள் வரை கேட்டுள்ளது. இதுதொடர்பாக ஸ்டாலின் மருமகன் சபரீசன் டெல்லியில் முகாமிட்டு பேச்சுவார்த்தையும் நடத்தியதையும், இறுதியில் 8 தொகுதிகளை காங்கிரஸுக்கு தர திமுக சம்மதித்துள்ளதையும் நேற்று காலை 7மணி பதிப்பில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். சிபிஎம்முக்கு 2, சிபிஐக்கு 1 இடம் ஒதுக்குவதாக திமுக கூறிய நிலையில், சிபிஎம்முக்கு இணையாக தங்களுக்கும் 2 இடங்கள் வேண்டும் என்று திமுகவிடம் சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக பேசியிருந்த சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், தன்மானத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று கூறினார். விசிக சார்பில் சிதம்பரத்தை குறிவைத்தே கூட்டணியில் காய்நகர்த்தி வருகிறார்கள்.

இது ஒருபுறமிருக்க திமுக தரப்பிலிருந்து பாமகவுடனும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்துவந்தன. ராமதாஸ் அதிமுக கூட்டணியை விரும்புவதாகவும் அன்புமணியோ திமுகவுடன் சேர நினைப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், அண்மையில் சென்னையிலுள்ள தனியார் ஹோட்டலில் அன்புமணியை சபரீசன் சந்தித்துப் பேசியிருந்தார் . இதனைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் திமுக 5+1 என்ற நிபந்தனையுடன் கூட்டணியில் சேர பாமக முடிவெடுத்துவிட்டதாக பாமக வட்டாரங்கள் கூறுகின்றன.

இப்படிபட்ட நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்க வேண்டிய சீட் ஷேரிங் லிஸ்ட் ஸ்டாலின் கையில் ரெடியாக இருக்கிறதாம். அதன்படி 22 தொகுதிகளில் திமுக போட்டியிட முடிவு செய்துள்ளது. புதுச்சேரியுடன் சேர்த்து காங்கிரஸுக்கு 8 இடங்களும், பாமகவுக்கு 5+1 (மாநிலங்களவை உறுப்பினர்) இடங்களும், சிபிஎம்முக்கு 2 தொகுதிகளும், மதிமுக, சிபிஐ, விசிக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் என முடிவு செய்யப்பட்டுவிட்டதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் கூட்டணிக்குள் சலசலப்புகளும் ஒலிக்கத் துவங்கிவிட்டன. பாமக இடம்பெற்றிருக்கும் அணியில் விசிக இடம்பெறாது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார். பாமக கூட்டணிக்குள் வரும் பட்சத்தில் திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியேறினால் விசிகவுக்கு ஒதுக்க இருந்த தொகுதியிலும் தானே போட்டியிட முடிவுசெய்துள்ளதாம் திமுக.

சனி, 16 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon