மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 பிப் 2019

2 ஆண்டுகளை நிறைவு செய்த எடப்பாடி அரசு!

2 ஆண்டுகளை நிறைவு செய்த எடப்பாடி அரசு!

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, அவருக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சசிகலா முதல்வராக பொறுப்பேற்க இருந்த நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் அவர் சிறை சென்றார். இதனையடுத்து சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. பின்னர் சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து ஒதுக்கி வைத்த எடப்பாடி, பன்னீர்செல்வத்துடன் இணைந்து கட்சியையும் ஆட்சியையும் தன்வசப்படுத்தினார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பதவியேற்று இரண்டாண்டுகள் முடிந்த நிலையில், இரண்டாம் ஆண்டு நிறைவு விழா நேற்று (பிப்ரவரி 15) கொண்டாடப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் இருவருக்கும் ஆளுயர மாலை அணிவித்து அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் தயாரிக்கப்பட்ட அரசின் இரண்டாண்டு சாதனைகள் குறித்த காலப் பேழை புத்தகத்தை முதல்வர் எடப்பாடி வெளியிட தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து குறும்படமும், சாதனை மலரும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரைகள் மற்றும் முதல்வரின் பொன்மொழிகள் புத்தகமும் வெளியிடப்பட்டது.

இதற்கிடையே முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “சவாலான சூழலில் பதவியேற்றபோது தொடர்வாரா என்று பலராலும் விமர்சிக்கப்பட்டாலும் தொடர்ந்து பல சவால்களையும்,சதிகளையும் கடந்து மக்களுக்கு பல நல்ல திட்டங்களை தந்து பல சோதனைகளை சாதனையாக்கி திறமையான மக்கள் மனம் கவர்ந்த முதல்வராக 3வது ஆண்டில் தொடரும் முதல்வருக்கு வாழ்த்துக்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

சனி, 16 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon