மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 பிப் 2019

காஷ்மீர் குண்டுவெடிப்பு: அனைத்துக் கட்சிக் கூட்டம்!

காஷ்மீர் குண்டுவெடிப்பு: அனைத்துக் கட்சிக் கூட்டம்!

காஷ்மீரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 14ஆம் தேதி தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோராவில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலால் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிர் துறந்தனர். இந்தச் சம்பவத்துக்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்று மத்திய அரசுக்குக் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்த விவகாரத்தில் அரசுக்கு அனைத்து வகையான ஆதரவையும் வழங்குவதாக பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பாக 2016ஆம் செப்டம்பர் மாதத்திலும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைகள் எதுவும் பெறவில்லை. அதற்கு மாறாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்த விளக்கம் மட்டும் தரப்பட்டது.

தற்போது, பாதுகாப்புப் படை வீரர்களின் உயிர்பலியைத் தொடர்ந்து எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, அனைத்துக் கட்சிகளுடனும் ஒருமித்த பார்வையுடன் கொள்கை வகுக்க இந்த அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ஜெய்ஸ் இ முகமது அமைப்பு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தது என்பதால் பாகிஸ்தான் மீது தெளிவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று (பிப்ரவரி 14) பாதுகாப்பு பற்றிய அமைச்சரவைக் குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, “மிகவும் ஆதரவான நாடுகளின் பட்டியலிலிருந்து பாகிஸ்தானை இந்தியா நீக்குகிறது. இந்தச் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான மறுக்க முடியாத ஆதாரங்கள் உள்ளன” என்று கூறியுள்ளார். ராகுல் காந்தி இந்த சம்பவம் குறித்து நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “காங்கிரஸ் கட்சி அரசுக்கு முழு ஆதரவை அளிக்கிறது. அடுத்த சில நாட்களுக்கு வேறு விவாதங்களை நடத்த மாட்டோம். அரசியல் பேசுவதற்கான நேரம் இதுவல்ல” என்று கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயிரிழந்த வீரர்கள் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தவும், உயிரிழந்த வீரர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவும் காஷ்மீர் சென்றிருப்பதால், அவர் டெல்லி திரும்பிய பிறகு அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். அநேகமாக அனைத்துக்கட்சி கூட்டம் இன்றே நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

சனி, 16 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon