மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 பிப் 2019

டெல்லி தீ விபத்து: 30 ஹோட்டல்களின் அனுமதி ரத்து!

டெல்லி தீ விபத்து: 30 ஹோட்டல்களின் அனுமதி ரத்து!

டெல்லி தீ விபத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், கரோபாக் பகுதியிலுள்ள 30 ஹோட்டல்களின் தீ பாதுகாப்புக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

டெல்லி கரோல் பாக் பகுதியில் செயல்பட்டு வந்த அர்பித் பேலஸ் என்ற நட்சத்திர ஹோட்டலில், கடந்த பிப்ரவரி 12ஆம் தேதியன்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் 17 பேர் பலியாகினர். இந்த விபத்தில் சிக்கிப் பலத்த காயமடைந்தவர்களுக்கு ராம் மனோகர் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் அந்த ஹோட்டலில் முறையாக மேற்கொள்ளப்படாததால் இந்த விபத்து நிகழ்ந்ததாகப் புகார் எழுந்தது.

கடந்த 13ஆம் தேதியன்று டெல்லி தீயணைப்புத் துறையானது 23 ஹோட்டல்களில் ஆய்வு மேற்கொண்டது. இதில் 13 ஹோட்டல்கள் தீ தடுப்பு பாதுகாப்பு அம்சங்களைச் செயல்படுத்தவில்லை என்று தெரிவித்தார் டெல்லி உள் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின். இதற்கடுத்த நாள் நடைபெற்ற ஆய்வின்போது 22 ஹோட்டல்களில் 17இல் விதிமுறைகள் மீறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மாநகராட்சிக்கு அறிக்கை அனுப்பப்பட்டு, காவல் துறையினர் அந்த ஹோட்டல்களை சீல் வைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டன. இந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 15) 30 ஹோட்டல்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது.

தீயணைப்புத் துறையின் சார்பில் இரண்டு பேர் கொண்ட ஆறு குழுக்கள் டெல்லி ஹோட்டல்களில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க, இந்த ஆய்வு தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து நடந்த அர்பித் பேலஸ் நட்சத்திர ஹோட்டலின் பொது மேலாளர் மற்றும் மேலாளரைக் கைது செய்தனர் டெல்லி போலீசார். ஆனால், அதன் உரிமையாளரைக் கைது செய்யவில்லை. இது குறித்துக் கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜெயின், அந்த ஹோட்டலின் உரிமையாளர் பாஜகவில் இருப்பதால் கைது செய்யப்படவில்லையா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ஹோட்டல்களின் தீ தடுப்பு பாதுகாப்பு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது, அங்குள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை நாட்கள் எந்தவித ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தாமல், திடீரென்று ஆய்வு மேற்கொண்டு அனுமதியை ரத்து செய்வது நியாயம் ஆகாது என்று தெரிவித்துள்ளார் கரோல்பாக் ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் சந்தீப் கண்டேல்வால்.

“தீ தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான அனுமதி ஒவ்வொரு ஹோட்டலுக்கும் ரத்து செய்து வருகின்றனர் அதிகாரிகள். இதற்கெதிரான நடவடிக்கை எடுக்க அவசியம் இருப்பதாக நினைத்தால், மாற்றங்களைச் செயல்படுத்த 15 நாட்களாவது கெடு அளிக்க வேண்டும். அதன்பின்னரும் விதிமுறைகளைக் கடைபிடிக்காத ஹோட்டல்களை மூட சங்கமே உதவும். ஆனால், தற்போதைய நடவடிக்கையால் பலர் வேலை இழப்பார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

பிப்ரவரி, மார்ச் மாதங்களில் டெல்லிக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வரும் நேரத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், இதனால் பலர் தங்களது பதிவை ரத்து செய்து வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

சனி, 16 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon