மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 பிப் 2019

சிங்கத்தைக் கூண்டிலடைத்த தேவ்

சிங்கத்தைக் கூண்டிலடைத்த தேவ்

பிரபலமான இயக்குனர், தயாரிப்பு நிறுவனம், முண்ணனி நடிகர் என இணைக்கப்பட்ட படதயாரிப்புகளுக்கு மட்டும் நிதியுதவி அல்லது முதல் பிரதி அடிப்படையில் படத்தைத் தயாரித்துத் தரும் வாய்ப்பை ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் வழங்குகிறது. அப்படி ஒரு இணைப்பு இருந்ததால் கார்த்தி - ரகுல் பிரீத் சிங் நடிப்பில் காதலர் தினத்தன்று வெளியான தேவ் படத்திற்கு ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் நிதியுதவி செய்திருந்தது.

மனிதர்களின் நேர்மையையும், தொழில் நேர்த்தியையும் நேரடியாக அனுபவரீதியாக உணர்ந்துகொண்டாலும். கார்ப்பரேட் நிறுவனங்கள் அதை அங்கீகரிப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரை முன் அனுபவத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தருவார்கள். கடன் கொடுக்கும் வங்கிகள் ஜெராக்ஸ் நகல்களுக்குத் தரும் அங்கீகாரத்தை நிஜ மனிதர்களுக்குத் தருவதில்லை.

கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கி, கடந்த வருடம் வெளியான கடைக்குட்டி சிங்கம் மிகப் பெரும் வெற்றி பெற்று திரையரங்குகளில் வசூல் ரீதியாக கல்லா கட்டியது. கடைக்குட்டி சிங்கத்தின் வெற்றிக்குப் பின் வரும் படம் என்பதால் தேவுக்குப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது

மோசமான திரைக்கதை காரணமாக முதல் நாளில் தேவ் படம் வசூல் ரீதியாகத் தோல்வியடைந்திருக்கிறது. இதற்குக் காரணம் திரைக்கதை அனுபவமற்ற தயாரிப்பாளரின் திரைக்கதைத் தேர்வு. அதன் விளைவாக வெற்றிகரமான நடிகராக இருக்கும் கார்த்தி நடித்த தேவ் திரையிட்ட திரையரங்குகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

பொங்கலை ஒட்டி வெளியான விஸ்வாசம், பேட்ட படங்களின் வெற்றிக்குப் பின் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவிவருகின்றன. தேவ் அதனை முறியடிக்கும் என விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தனர். அந்த நம்பிக்கையை தேவ் நிறைவேற்றவில்லை.

கடைக்குட்டி சிங்கத்தின் வெற்றியுடன் கம்பீரமாய் வலம்வந்த கார்த்தியை, தேவ் படத்தின் எதிர்பாராத தோல்வி கூண்டுக்குள் அடைத்துவிட்டது.

சனி, 16 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon