மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 பிப் 2019

நலிவடையும் அன்னா ஹசாரே உடல்நிலை!

நலிவடையும் அன்னா ஹசாரே உடல்நிலை!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் உடல்நிலை மிகவும் நலிவடைந்து வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

81 வயதான சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மகாராஷ்டிர மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டத்தின் ராலேகான் சித்தி கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். லோக்பால் அமைக்கக் கோரி மத்திய அரசை வலியுறுத்தியும், லோக் ஆயுக்தா அமைக்கக் கோரி மகாராஷ்டிர அரசை வலியுறுத்தியும் அன்னா ஹசாரே தனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில், ஜனவரி 30ஆம் தேதி முதல் பிப்ரவரி 5ஆம் தேதி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இந்தப் போராட்டத்தால் அவரது உடல் எடை 5 கிலோ வரை குறைந்தது.

இதையடுத்து ஏற்பட்ட உடல்நலக் குறைவால் பிப்ரவரி 14ஆம் தேதி அன்னா ஹசாரே நோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்கு முந்தைய 2 நாட்களாக நரம்புப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதைத்தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டதாலும் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாக அன்னா ஹசாரேவின் உதவியாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும், வயது முதிர்வு காரணமாக அவரது உடல் பலவீனமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் மேலும் கூறுகையில், ‘மூளைக்கு ரத்தம் செல்வதில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. அதனால் உடல்சோர்வு மற்றும் உடல்நிலையில் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஹசாரேவின் உடல் மிகவும் நலிவடைந்து பலமிழந்துவிட்டது. அவருக்கு உயர் பரிசோதனைகள் செய்யப்பட்டு, உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது’ என்று கூறியுள்ளனர். ஆனாலும் அவரது உடல்நிலை குறித்து கவலையடையத் தேவையில்லை எனவும் அன்னா ஹசாரேவின் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சனி, 16 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon