மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 பிப் 2019

ஆர்யா - சாயிஷா: காதல் திருமணமல்ல!

ஆர்யா - சாயிஷா: காதல் திருமணமல்ல!

ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் நடக்கவிருக்கும் திருமணம் காதல் திருமணமல்ல என்று சாயிஷாவின் அன்னை தெரிவித்துள்ளார்.

நடிகர் ஆர்யாவும், சாயிஷாவும் கஜினிகாந்த் திரைப்படத்தில் ஒன்றாக நடித்தனர். பழம்பெரும் பாலிவுட் நடிகரான திலீப் குமாரின் பேத்தியே சாயிஷா. ஆர்யாவும், சாயிஷாவும் காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் சில நாட்களுக்கு முன்பு வெளியாகின. இதையடுத்து காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தானும் சாயிஷாவும் ஒன்றாக இருக்கும் படத்தைப் பதிவிட்டு, தாங்கள் இருவரும் காதலிப்பதாகவும், மார்ச் மாதம் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் உறுதிப்படுத்தினார். அதே பதிவை அப்படியே சாயிஷாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இருவருக்கும் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள், பிற துறை சார்ந்தவர்கள் எனப் பலரும் ட்விட்டரில் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

எனினும் இவர்களது திருமணம் குறித்து சாயிஷாவின் அன்னை ஷாஹினி, “இந்தத் திருமணத்தில் எங்களுக்கு முழு விருப்பம் உள்ளது. இந்நாளில் எங்கள் குடும்பத்தாருக்கும், ஆர்யா குடும்பத்தாருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அவரது ட்வீட் இருந்தது. இது காதல் திருமணம் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே இந்த முடிவு இரு குடும்பத்தாரும் இணைந்து எடுத்த முடிவு. ஆர்யாவின் குடும்பத்தாருக்கு சாயிஷாவை பிடித்ததால் திருமணத்திற்காக அணுகினார்கள். ஆர்யா என் மகளைத் திருமணம் செய்துகொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணத்துக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் அதற்கான பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

சனி, 16 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon